வடக்கே பச்சரிசி மலை (வெண்மை), தெற்கே பிண்ணாக்கு மலை (கருமை) என இம் மலையின் இரு மருங்கிலும் மலைத் தொடர்கள் உள்ளன.
பக்தர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுவதால் 'க்ஷிணிகாசலம்' என்றும், செல்வங்களை வாரி வழங்குவதால் 'பூரணகிரி' என்றும் பெயர் கொண்டது.
சூரபத்மனை போரில் வென்று, போர் முடித்த சினம் தணிந்து இருக்கும் இடம் என்பதால் 'தணிகை மலை' எனப் பெயர் கொண்டது. ஸ்ரீ சுப்ரமண்யர் தானே தேர்ந்து எடுத்து அமர்ந்த மலை.
சினம் தணிந்து இருக்கும் ஸ்தலம் என்பதால் இங்கு சூர சம்ஹார நிகழ்வை நடத்திக் காட்டுவதில்லை. தெய்வயானையின் திருமணத்தின் போது, சீதனமாக இந்திரன் தந்த ஐராவதமே இங்கு நிற்கின்றது. தன்னிடம் இருக்கும் செல்வம் குறைய ஆரம்பிப்பதாக இந்திரன் முறையிட்டதால், ஐராவதத்தை தேவலோகம் பார்த்து நிற்க சொன்னதாக கூறுவர்.
தெய்வயானையின் திருமணத்தின் போது, சீதனமாக தந்த பெரிய சந்தனக் கல்லில், தினமும் சந்தனம் அரைத்து ஸ்வாமிக்கு சாத்துகின்றனர். இதை 'ஸ்ரீ பாதரேணு' என்பர். பக்தர்களுக்கு இதை பிரசாதமாக தருகின்றனர். இன்றளவும் இது தேயாமல் இருப்பது அதிசயம்.
சூரபத்மனால் கொள்ளையடிக்கப்பட்ட சங்கநிதி - பதும நிதி செல்வங்களை, முருகன் மீட்டு, சிறிது காலம் தணிகை மலையில் வைத்திருந்து, பின்னர் இந்திரனுக்கே திருப்பி அனுப்பியதாக கூறுவர்.
திருமாலிடமிருந்து சக்ராயுதத்தை கைப்பற்றிய தாராசூரன், அதை திருமால் மீதே ஏவ, அதை தடுத்து தன் மார்பில் தாங்கிய முருகன், அதை திருப்பி திருமாலிடமே ஒப்படைத்தார். சக்கரம் பதிந்த தழும்பு மார்பில் உள்ளது.
சிறைப்படுத்தப்பட்ட பிரம்மன் மீண்டும் ஸ்ருஷ்டி வல்லமை பெற தவமிருந்த ஸ்தலம். அவர் உண்டாக்கிய பிரம்ம தீர்த்தமும், பிரம்மேஸ்வரர் எனும் லிங்கமும் மலைப் பாதையில் காணலாம்.
சரஸ்வதி தீர்த்தம், சரஸ்வதீஸ்வரர், விஷ்ணு தீர்த்தம், இந்திரன் உண்டாக்கிய இந்திர நீலச்சுனை போன்ற தீர்த்தங்களை மலையில் காணலாம். இந்திர நீலச்சுனை தீர்த்தம் முருகனின் அபிஷேகத்திற்காக மட்டுமே. பக்தர்கள் நீராட அனுமதி இல்லை. இந்த சுனையை இந்நாளில் செங்கழுநீர் ஓடை என்பர். இதில் மலரும் நீலோத்பவ மலர் பூஜைக்கு பயன்படுத்தப்படுகிறது.
அறுபடை வீடுகளுள் ஒன்று - அநாகத ஸ்தலம்.