ஸ்தல வரலாறு:
சூரபத்மனை சம்ஹாரம் செய்து முடித்த பிறகு, இத்தலத்தில் வெற்றிவீரராக அமர்ந்திருந்தார் முருகப் பெருமான்.
தேவேந்திரனின் வேண்டுகோளுக்கிணங்கி, அவரது மகளான தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட ஸ்தலம் இது.
பிரம்மா திருமணம் செய்து வைக்க, சூரிய-சந்திரர்கள் ரத்ன தீபம் தாங்கி நிற்க, இந்திரன் தாரை வார்த்துக் கொடுக்க, பார்வதி-பரமேஸ்வரன் பரமானந்தத்தில் திளைக்க, தெய்வயானை-முருகன் திருமணம் இனிதே நடந்தேறிய ஸ்தலம்.
இந்த திருமணத்திற்கு அனைத்து தெய்வங்களும் எழுந்தருளி வாழ்த்தினர். குமரனுடைய திருமணத்திற்காக சிவபெருமான் உமையவளோடு எழுந்தருளி தேவர்களுக்கு காட்சியளித்த ஸ்தலம்.
பரமன் (சிவபெருமான்) எழுந்தருளிய குன்றம் என்பதால் பரங்குன்றம் எனப் பெயர் கொண்டது. குன்று சிவலிங்க வடிவில் இருப்பதால் கிரிவலம் வருகின்றனர். (கிரிவல தூரம் 3 கி.மீ.)
சிவபூஜையை மறந்திருந்த நக்கீரர் பூதத்தால் சிறைபடுத்தப்பட்டு பாதாளத்தில் அடைபட்டுக் கிடந்தார். திருமுருகாற்றுப்படை பாடி, முருகனருள் பெற்று மீண்டார் என புராண வரலாறு கூறுகிறது.
பிரம்மனும், தேவர்களும், முனிவர்களும் வழிபட்ட ஸ்தலம் இது.
மாணிக்கவாசகருக்கு குருவாய் உபதேசம் செய்த பெருமான், தாமே சீடராய் இருந்து உபதேசம் கேட்டதாக கூறுவர்.