ஸ்ரீ ராமானுஜாச்சாரியாரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, வைஷ்ணவ சம்பிரதாயம் தழைத்தோங்க உதவியவர் ஸ்ரீ வேதாந்த தேசிகன். 730 வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்த ஆச்சார்யர். உரிய காலத்தில் வித்யாப்பியாசத்தைத் தொடங்கி அனைத்தையும் விரைவில் கற்றுணர்ந்தார். திருவஹீந்திரபுரத்திற்குச் சென்ற ஸ்வாமி தேசிகன், அங்குள்ள ஒளஷதகிரியில் அஸ்வத்த விருட்சத்தின் கீழமர்ந்து கருட மந்திரத்தை இடைவிடாது ஜபித்தார். பிரத்யக்ஷமான கருடன் ஹயக்ரீவ மந்திரத்தை அவருக்கு உபதேசித்தார். அந்த மந்திரத்தைக் கொண்டு ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவரை உபாசித்தார் ஸ்வாமி தேசிகன். இதனால் மகிழ்ச்சியுற்ற ஸ்வாமி, திருமுக மண்டலம் மட்டும் குதிரை வடிவமாகக் கொண்டு ஸ்ரீ ஹயக்ரீவனாக சேவை சாதித்தார். 'ஹய' என்றால் குதிரை. வெண் புரவியின் திருமுகம் கொண்டவர் ஹயக்ரீவப் பெருமான். ஸ்வாமி தேசிகன் எண்ணற்ற ஸ்தோத்திரங்களை இயற்றினார். அவற்றுள் ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம், ஸ்ரீ தேசிகப் பிரபந்தம், ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம் போன்ற சிறந்த நூல்களை அருளினார். பின்னர் க்ஷேத்ராடனம் புறப்பட்டுச் சென்றார். ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீ பாஷ்யம் மற்றும் கீத பாஷ்யம் ஆகியவற்றிற்கு விரிவுரை எழுதினார். வித்தைக்கு அதிபதியான ஸ்ரீ ஹயக்ரீவரை வழிபடும் சேவார்த்திகள் கல்வியும் ஞானமும் பெறுவர்.
ஹயக்ரீவர் ஸ்லோகம்:
சங்க சக்ர கதா பத்ம சார்ங்க பாசாஸி தாரிணம்
ஞானாதி புஸ்தகதரம் ஹயானன மஹம் பஜே
ஹயக்ரீவர் காயத்ரி:
ஓம் வாகீஸ்வராய வித்மஹே, ஹயக்ரீவாய தீமஹி
தன்னோ ஹம்ஸஹ் ப்ரசோதயாத்
(கடலைப் பருப்பு, வெல்லம், தேங்காய் துருவல், நெய், ஏலக்காய் பொடி சேர்த்து செய்த சுண்டல் - உடுப்பி ஸோதே மடத்தில், ஹயக்ரீவருக்கு நைவேத்தியமாக செய்யப்படுகிறது. இதை ஹயக்ரீவ பண்டி என்பர்.)