முக்காலமும் உணர்ந்த காலவ மகரிஷி தனக்கு வரவிருக்கும் தொழுநோயைப் பற்றி முன் கூட்டியே அறிந்து கொண்டு, நவக்கிரகங்களை நோக்கி தவமிருந்து, வரங்கள் பெற்று, வரவிருந்த நோயிலிருந்து தப்பித்துக் கொண்டார். எதிர் காலத்தில் நடக்கவிருந்த நிகழ்வை தடுத்ததாலும், தங்களது அதிகார வரம்பை மீறி வரமளித்ததாலும், பிரம்மன் நவக்கிரகங்களுக்கு சாபமிட்டார். சாபத்தினால் தொழுநோய் கொண்ட நவக்கிரகங்கள், அருகேயுள்ள திருமங்கலகுடி எனும் ஸ்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு விமோசனம் பெற்றனர் என ஸ்தல வரலாறு.
சூரியன் தலைமையில் நவக்கோள்கள் தவமியற்றி சாப விமோசனம் பெற்ற இந்த வெள்ளெருக்கு வனம் சூரியனார்கோவில் என்றழைக்கப்படுகிறது. உச்சிக்கிழான் கோட்டம் என சிலப்பதிகாரம் வர்ணிக்கின்றது.
முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட ஆலயம். (1079 - 1120) மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்து வடக்கே சூரிய புஷ்கரிணி எனும் தீர்த்தம் இருக்கின்றது.
சூரியன் அஷ்ட திக் பாலகர்களில் ஒருவன். சூரியனை, நாராயண அம்சம் என்றும், சிவனுடைய அஷ்ட மூர்த்தங்களில் சூரியனும் ஒருவன் என்றும் கூறுவர். சூரியனை ஒளி ரூபமாகவும், மந்திர ரூபமாகவும் வழிபட்டனர் நம் முன்னோர்கள். நவக்கிரகங்களின் தலைவன் சூரியன்.
களத்திர தோஷம், விவாஹ பிரதி பந்த தோஷம், புத்திர பிரதி பந்த தோஷம், வித்யா பிரதிபந்த தோஷம், உத்யோக பிரதி பந்த தோஷம், சூரிய தசை - சூரிய புக்தி நடப்பவர்கள், கிரக தோஷம் உள்ளவர்கள் இத்தலத்திற்கு தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமைகளில் வந்து வழிபட்டு பரிகாரம் தேடிக் கொள்கின்றனர்.
ஓம் எனும் ஓசையிலிருந்து ஒளி மயமான சூரியன் தோன்றினான் என மார்க்கண்டேய புராணம் கூறுகிறது. விராட புருஷனின் கண்களிலிருந்து தோன்றியதாகவும் கூறுவர். காசிபருக்கும் அதிதிக்கும் பிறந்த பன்னிரெண்டு புத்ரர்களே பன்னிரு சூரியர்கள் என பாரதம் கூறுகிறது.
ஒரே ஒரு சக்கரம் உள்ள தேரை, ஏழு வித நிறங்களைக் கொண்ட ஏழு குதிரைகள் இழுக்க, அருணன் சாரதியாக ஓட்ட, மேற்கு முகமாக ஓடும் தேர், மேரு மலையை வலமாக சுற்றி வருவதாக கூறப்படுகிறது.
சூரிய உபாசனை, சூரிய நமஸ்காரம், ஆகியன மிகவும் பயன் தருவது. ஆதித்ய ஹ்ருதயம் எனும் மந்திர உபதேசம் பெற்ற ஸ்ரீ ராமர் ராவணனை வென்றார்.
நவக்கிரக ஸ்தலங்களுள் ஒன்று - சூரிய ஸ்தலம்