கிருத யுகத்தில் காமதேனுவாலும், திரேதா யுகத்தில் சுக்ரீவனாலும், துவாபர யுகத்தில் ஐராவதத்தாலும், கலியுகத்தில் தேவர்களாலும் வழிபடப்பட்டு பூஜிக்கப்பட்ட இறைவன்.
ராவண சம்ஹாரத்தின்போது கொண்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க சுக்ரீவன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம் என்பதால் 'சுக்ரீஸ்வரர்' என்ற திருநாமம் கொண்டார்.
இக்கோவிலைச் சேர்ந்த நந்திப் பசுமாடு ஒரு தோட்டத்தில் பயிர்களை மேய்ந்து கொண்டிருந்ததாம். கோபம் கொண்ட தோட்டக்காரர் பசுவின் காதுகளை அறுத்து விட்டாராம். மறுநாள் கோவிலுக்கு வந்த பக்தர்கள் நந்திக்குக் காது அறுபட்டு கிடப்பது கண்டு வேதனையடைந்து, புதிய நந்தி ஒன்றை பிரதிஷ்டை செய்ய முற்பட்டனர். பழைய நந்தி இடம் தராததால் இரண்டையுமே வைத்து வழிபடுவதாக கூறப்படுகிறது.
மிளகு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இவ்வூர் வழி வந்த வியாபாரி ஒருவனை வழிமறித்த இடையன் ஒருவன், "மூட்டைகளில் என்ன?" என வினவினான். மூட்டைகளில் பயறு இருப்பதாக பொய் கூறினான் வியாபாரி. இடையன் வடிவில் வந்த இறைவன் அவனது பொய்யை உண்மையாக்கி மூட்டைகளில் பயறு இருக்கும்படி செய்து விட்டார்.
செய்த தவற்றிற்கு வருந்திய வியாபாரி தன்னை மன்னிக்குமாறு இறைவனை வேண்டி மீண்டும் மிளகு மூட்டைகளைக் பெற்றான் என்பது ஸ்தல வரலாறு.