அசுரர்களால் துரத்தப்பட்ட தேவர்கள் மந்திரமலை குகைக்குள் ஒளிந்து கொண்டனர். தேவேந்திரன் இங்குள்ள பலாச வனத்திற்கு (புரச மரக் காடு) வந்து ஸ்ரீமந் நாராயணனைக் குறித்து நீண்ட தவம் மேற்கொண்டான். இதனால் இப்பகுதிக்கு இந்திரகிரி என்ற பெயர் வந்தது.
'பெருமை மிக்கவள் ஸ்ரீதேவியா - பூதேவியா?' என்று நாரதர் ஆரம்பித்த கலகத்தால், இருவரையும் தராசுத் தட்டுகளில் அமரச் செய்தார் பெருமாள். பூதேவி அமர்ந்த தட்டு கீழே சென்றதால், கோபம் கொண்ட ஸ்ரீதேவி இவ்வனத்திற்கு வந்து தவம் புரியலானாள். ஸ்ரீதேவி தவம் மேற்கொண்ட இடம் என்பதால் ஸ்ரீநகர் எனப் பெயர் பெற்று, பின்னர் தூய தமிழில் திருப்பேர்நகர் என அழைக்கப்படலாயிற்று.
கோவில் என்றால் ஸ்ரீரங்கம். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஆதியாக அடி எடுத்துக் கொடுத்ததால் இவ்வூர் கோவிலடி எனப் பெயர் கொண்டது. உபய காவேரி மத்தியில் அமைந்திருப்பதால் அப்பாலரங்கம் என அழைக்கப்படுகிறது.
காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த உபரிசரவசு மன்னன், மதம் பிடித்த யானையை அழிக்க எய்த அம்பினால் பயந்து ஓடிய யானை, குளத்தருகே அனுஷ்டானங்கள் செய்து கொண்டிருந்த பிராம்மணனை மிதித்துக் கொன்றுவிட்டது. மீண்டும் அம்பெய்து யானையைக் கொன்றுவிட்டான் மன்னன். இதனால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. தோஷத்தைப் போக்கிக் கொள்ள இந்திர புஷ்கரிணியில் நீராடி, ஓம் பத்மநாபாய நம: எனும் மந்திரத்தை ஜபித்து தவம் மேற்கொண்டான். தினமும் பிராம்மணர்களுக்கு அன்னதானம் செய்து வந்தான்.
உபரிசரவசுவை சோதிக்க எண்ணிய ஸ்ரீமந் நாராயணன், வயசான அந்தணர் தோற்றத்தில் வந்து, தனக்கு மிகவும் பசியாக இருப்பதாகவும், உடனே ஏதாவது ஆகாரம் தர வேண்டும் என்றும் கோரினார். 'மற்ற அந்தணர்கள் மதிய உணவுக்காகச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் வந்தவுடன் எல்லோருமாக உணவு உண்ணலாம்' என்றான் மன்னன்.
'நான் எல்லா நித்ய கர்மானுஷ்டானங்களையும் செய்து முடித்தாகிவிட்டது. என்னை காத்திருக்க வைப்பது நியாயம் இல்லை' என்றார் வயோதிகராக வந்த எம்பெருமான். உடனே மன்னனும் விருந்தோம்பல் செய்து, அவரது கால்களை அலம்பி, இருக்கையில் அமரச் செய்து, அமுது படைத்தான். பரிமாறப்பட்ட அத்தனை வகை உணவுகளையும் ஒரு நொடியில் உண்டு தீர்த்துவிட்டார் வயோதிகர். மடைப்பள்ளியில் மற்றவர்களுக்காக வைத்திருந்த உணவையும் விட்டு வைக்கவில்லை. 'அரை வயிறு கூட நிரம்பவில்லையே, எனக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் உணவு தர மாட்டாயா?' என்று வினவினார் வயோதிகர்.
நடந்த தவற்றிற்கு மன்னிப்பு கோரிய மன்னன், 'ஒரு நொடியில் மீண்டும் சமைத்துக் கொண்டு வந்து பரிமாறுகிறேன்' எனக் கூறினான். 'சமைக்கும் வரை பசி தாங்கமாட்டேனப்பா.. சிரமப் பரிகாரம் செய்துகொள்ள படுக்கை ஒன்றை தயார் செய்துவிட்டு, நீ போய் அப்பம் செய்து கொண்டு வந்து கொடு, பிறகு சமைத்த உணவை உண்ணலாம்' என்றார்.
ஒரு குடம் நிறைய ருசியான அப்பங்களை செய்து கொண்டு வந்தான் உபரிசரவசு. அப்பக் குடத்தில் வலது கரத்தை வைத்து ஆசி வழங்கிவிட்டு, மன்னனுக்குத் தனது சுயரூபத்தைக் காட்டி சேவை சாதித்தார். அப்பக்குடத்தான் என்ற திருநாமத்தையும் கொண்டார்.
உபரிசரவசுவிற்கு முக்தி அளித்துவிட்டு, பள்ளி கொண்ட பெருமாளாக, சேவார்த்திகளுக்கு சேவை சாதிக்கின்றார். சரணாகதி அடைந்த மார்க்கண்டேயனின் சிரசின் மீது கரத்தை வைத்து ஆசி வழங்கி, அவனுக்கு சிரஞ்சீவியாக வாழும் வரத்தையும் அளித்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. தனது தவத்தை முடித்துக் கொண்டு பள்ளிக் கொண்ட பெருமாள் அருகே அமர்ந்த ஸ்ரீதேவியை, தனது மார்பில் சேர்த்துக் கொண்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
பக்தனை சோதித்து அவனுக்கு மோட்சம் அளிக்கவும், பூதேவியை விட ஸ்ரீதேவிக்கு அதிக பெருமை உண்டு என உலகோர்க்கு எடுத்துக் காட்டவும், இத்தலத்திற்கு லட்சுமியின் பெயரைச் சூட்டவும், இங்கு வயோதிகர் தோற்றத்தில் வந்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது.
மாலை வேளை பூஜையில் பெருமாளுக்கு அப்பம் படைப்பார்கள். வைகுண்ட ஏகாதசியன்று, ஒரு குடம் நிறைய அப்பங்களை வைத்து நைவேத்தியம் செய்வார்கள்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகவும், பஞ்ச ரங்க க்ஷேத்திரங்களுள் ஒன்றாகவும் இத்தலம் விளங்குகிறது.