முடிகொண்டான் ஆற்றை கடந்து செல்ல வேண்டும். கோவிலைச் சுற்றிலும் மாலை போட்டாற் போல அகழி ஒன்று இருக்கின்றது. வில்வாரண்ய க்ஷேத்ரம் என்பர்.
மனதை கட்டுப்படுத்த தெரியாமல் அலை பாய விட்டதனால், சிவபெருமானின் சாபம் கொண்டு, பசு வடிவம் கொண்ட பார்வதி, பூலோகம் வந்து பிராயச்சித்தம் செய்ய சிவலிங்கத்தை தேடி அலைந்தாள். இங்குள்ள வில்வாரண்யத்திலுள்ள குட்டையில் இறங்கி தனது கொம்புகளால் தரையை குத்தினாள். குட்டையின் அடியில் லிங்க வடிவில் இருந்த சிவபெருமான் மேலே வந்தார்.
பசு வடிவிலிருந்த அம்பாள் லிங்கத்திருமேனி மீது பாலை பொழிந்து அபிஷேகம் செய்து தனது சாபத்தைப் போக்கிக் கொண்டாள். கொம்புகளால் குத்தப்படும்போது லிங்கத் திருமேனியில் பிளவு ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. தனது பாலையே விட்டு காயத்தை ஆற்றி வழிபட்டாள் அம்பாள் என ஸ்தல வரலாறு. லிங்கத்தின் உச்சியில் வடு இருக்கின்றது.
கொண்டி என்றால் துஷ்ட மாடு என்று பொருள். துஷ்ட மாட்டின் கொம்புகளால் குத்தப்பட்டதால் இவ்வூருக்கு கொண்டீஸ்வரம் எனப் பெயர் வந்தது.
பசுவாக மாறிய அம்பாளுக்கு துணையாக வந்த மஹாவிஷ்ணு, எதிரிலுள்ள தூத்துக்குடி அக்ரஹாரத்தில் கோவில் கொண்டுள்ளார். ஸ்ரீ வேணுகோபாலகிருஷ்ணன் சேவை சாதிக்கின்றார். அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் ஒன்றும் உள்ளது.