புராண வரலாறு: பாண்டவர்களின் தூதராக கண்ணபிரான் வர இருப்பதை தெரிந்து கொண்ட துரியோதனன், அவனது மாமா சகுனியின் சதித் திட்டப்படி, தனது சபா மண்டபத்தில் பெரிய நிலவறையை வெட்டி, அதன் மேல் மூங்கில் பிளப்புகளைக் கொண்டு மூடி, ஒரு துணியால் போர்த்தி, அதன் மேல் பிரத்யேகமாக ஒரு பொய்யாசனத்தை அமைத்தான். கண்ணன் அதில் அமர்ந்தால், இருக்கை சரிந்து, கண்ணன் நிலவறையில் விழுவான் என்று திட்டமிட்டான். நிலவறையின் கீழ் ராட்சத மல்லர்களை ஒளித்து வைத்திருந்தான். கீழே விழும் கண்ணனை அவர்கள் அழித்து விடுவார்கள் என்றும் திட்டமிட்டான். இவற்றை எல்லாம் அறிந்த கண்ணபிரான், பெரிய திருமேனியுடன் விஸ்வரூபம் எடுத்து பொய்யாசனத்தில் அமர்ந்தார். ஆசனம் முறிந்து கண்ணபிரான் நிலவறைக்குள் விழுந்தார். தாக்க வந்த மல்லர்களை விஸ்வரூபம் எடுத்து துவம்சம் செய்தார் என புராண வரலாறு கூறுகிறது. இந்த விஸ்வரூப தரிசனத்தை திருதிராஷ்டிரனுக்கும் காட்டியருளினார்.
ஸ்தல வரலாறு: முனிவர் வைசம்பாயனர் மூலம் இந்த புராண வரலாற்றைக் கேள்வியுற்ற ஜனமேஜய மகாராஜா, பரமாத்மாவின் இந்த விஸ்வரூப கோலத்தைக் காண மிகுந்த ஆசை கொண்டு காஞ்சிபுரம் வந்து, ஹரித முனிவரை வைத்து அஸ்வமேத யாகம் நடத்தி வேண்டியதால் கிருஷ்ண பரமாத்மா பிரத்யட்சமாகி, ஜனமேஜய மகாராஜா, ஹரித முனிவர், மற்றுமுள்ள முனிவர்களுக்கும் விஸ்வரூப சேவை சாதித்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது. தாயார் ருக்மணி ஹரித முனிவருக்கு பிரத்யட்சமானதாக ஐதீகம். மூலஸ்தானம் பெரியதாக இருப்பதாலும், விஸ்வரூப பெருமாள் என்பதாலும், பட்டாச்சாரியர்கள், தீவட்டி வெளிச்சத்தில் திருமுக மண்டலத்தை சேவார்த்திகளுக்குக் காட்டுகின்றனர். ரோஹிணி தேவி ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு சந்திர பகவானை அடையும் பாக்கியத்தைப் பெற்றாள் என்றும் இன்றளவும் ஸ்தூல சூக்ஷ்ம வடிவில் வழிபட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆயுட்கால வழிபாட்டு ஸ்தலமாக விளங்குகிறது. விஸ்வரூப தரிசனம் தரும் கிருஷ்ணரின் திருவடிகள் பூமியை அழுத்திக் கொண்டிருப்பதால், இத்தலத்தில் அங்க பிரதட்சிணம் அல்லது அடிப்பிரதட்சிணம் செய்வோர்க்கு, விஸ்வபாத யோக சக்தி கிடைத்து, அவர்களின் வாழ்வு சிறப்புற அமையும் என பட்டாச்சாரியார் தெரிவிக்கின்றார். இது 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.