சிவபெருமானை அழைக்காமல், தட்சன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்டவர்களை, வீரபத்ரர் தண்டித்தார். அப்போது வீரபத்ரர் அடித்த அடி, அங்கிருந்த சூரியனின் மீது பட்டு, சூரியன் தன் கண் பார்வையை இழந்தான்.
இழந்த பார்வையை மீண்டும் பெற, சூரியன் இத்தலத்திற்கு வந்து, இவ்விறைவனை வழிபட்டு, கண்ணொளி பெற்றான். இதனால் சுவாமிக்கு கண்ணமர்ந்த நாயனார் என்று பெயர். வடமொழியில் நேத்ர உத்தாரணேஸ்வரர் எனும் திருநாமம். பனங்காடாக இருந்த பகுதியானதால் இறைவனுக்கு பனங்காட்டீஸ்வரர் என்றும் பெயர்.
கண்களைக் காத்திடும் கண்கண்ட தெய்வமாக இருப்பதால், இவரிடம் பிரார்த்தனை செய்தால் பார்வைக் குறைவு மற்றும் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகின்றன.
ஒரு புறாவுக்காக, தனது தசையை அறுத்துக் கொடுக்க முற்பட்ட சிபி சக்ரவர்த்தியின் கருணை உள்ளத்திற்காக, அவருக்கு முக்தி கிடைத்த ஸ்தலம்.
ஆதியில் ஊர் வழக்குகளை அம்பாள் முன்பாக விசாரிப்பது வழக்கத்தில் இருந்ததாம். பொய் பேசுபவர்களை உடனுக்குடன் தண்டிப்பதால், அம்பிகை முன் மெய் மட்டுமே பேசுவார்கள். இதனால் அம்பிகை, மெய்யாம்பிகை எனப் பெயர் கொண்டாள்.
புறவு என்றால் சோலை என்று அர்த்தம். பனைமரங்கள் சோலையாக இருந்ததாலும் மற்ற பனையூர்களிலிருந்து, இவ்வூரை வித்தியாசப்படுத்த வேண்டியும், இவ்வூருக்கு புறவார் பனங்காட்டூர் என்று பெயர் வந்தது என்பர்.
தேவாரத் திருத்தலம்.