ஸ்ரீ தேவி, பூ தேவி, நீளா தேவி ஆகிய மூவரும் தங்களுக்குள் யார் பெரியவர்? என்ற தர்க்கத்தில் போட்டியிட முற்பட்டனர். ஸ்ரீ தேவி பூலோகத்திற்கு வந்து சோலைகளால் சூழப்பட்ட இத்தலத்தில் அமர்ந்து தவமிருக்கலானாள். மகரிஷிகளும் முனிவர்களும் அவளைப் போற்றி ஆராதித்து வழிபட்டனர். இத்தலத்திலேயே இருக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். மணவாளன் இல்லாமல் ஏகாந்தமாக இருக்கலாகாதென எண்ணிய ஸ்ரீ தேவி இங்கு ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி மஹாவிஷ்ணுவை அனுதினமும் பூஜித்தாள். பிரத்யட்சமான மஹாவிஷ்ணுவிடம், தன்னோடு இத்தலத்தில் எழுந்தருளி சேவார்த்திகளை அனுக்ரஹிக்க வேண்டினார். பூ தேவியும் நீளா தேவியும் இத்தலத்திற்கு வந்து அது போலவே வேண்டி நின்றனர்.
அவர்கள் மூவரிடையே ஏற்பட்ட சர்ச்சை நீங்கி அமைதி ஏற்பட்டது. மஹாவிஷ்ணுவும் மூன்று தேவியர்கள் உடன் இருக்க திருவுளம்கொண்டார் என ஸ்தல வரலாறு.
திருமகள் ஆகிய ஸ்ரீ தேவி தங்குவதற்குத் தேர்ந்தெடுத்த இடம் என்பதால் திருத்தங்கல் என்ற பெயர் பெற்றது. புரூரவன் எனும் அரசன் தன் நாட்டைப் புத்திரர்களிடம் ஒப்படைத்துவிட்டு தனது பத்னிகளுடன் இத்தலமருகே உள்ள வனத்தருகே கடுந்தவம் புரிந்து மஹாவிஷ்ணுவின் அருளைப் பெற்றான்.
துவாரகையில் நடைபெறவிருந்த உஷை - அநிருத்தன் கல்யாணம் இவரின் வேண்டுகோளுக்கிணங்க இத்தலத்தில் நடைபெற்றதாக ஐதீகம்.
கிருஷ்ணரின் புத்திரனான பிரத்யும்னனுக்கு, மன்மதனை மிஞ்சும் அழகையுடைய மகன் ஒருவன் இருந்தான். அவனது பெயர் அநிருத்தன். பாணாசுரன் எனும் அசுரனின் மகளான உஷை, தான் அழகிய ராஜகுமாரன் ஒருவனோடு இருப்பதாகக் கனவு கண்டாள். கனவை நினைவாக்க முயற்சிக்கையில் அவன் அநிருத்தன் என்பதை அறிந்து, தனது மாயா சக்தியால் அவனைத் தனது அரண்மனைக்குத் தூக்கிக் கொண்டு வந்துவிட்டாள். அநிருத்தனுடன் கூடி கர்ப்பஸ்திரீ ஆனாள். பேரனை மீட்கப் படை திரட்டிக் கொண்டு வந்த கிருஷ்ணர், உஷை கர்ப்பஸ்திரீ என அறிந்ததும் வேறு வழியன்றி இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தார். இத்திருமணம் திருத்தங்கலில் மூலவர் முன்பாக நடந்தேறியது என்றும் தெய்வீக வாசுதேவனும் மற்றும் பலரும் இத்திருமணத்திற்காக வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
ஆதிசேஷனுக்கும் ஆலமர விருட்சத்திற்கும் தங்களுக்குள் யார் பெருமைக்குரியவர் என்ற போட்டி ஏற்பட்டு, அதன் விடையைக் கண்டறிய பிரம்மனிடம் சென்று பிரஸ்தாபித்தன. திருமால் எப்போதும் பள்ளி கொண்டிருப்பதால் ஆதிசேஷனே பெருமைக்குரியவர் என பிரம்மா கூறினார். இதனால் ஆலமரமானது திருத்தங்கல் க்ஷேத்ரம் வந்து ஒரு மலை வடிவம் கொண்டு திருமாலை நோக்கித் தவமிருந்தது. அதன் வேண்டுகோளுக்கிணங்க திருமால் அந்த மலையின் மீது கோவில் கொண்டார் என ஸ்தல வரலாறு. இதனால் (தங்கு + ஆல) தங்கால மலை எனப் பெயர் கொண்டது. ஆர்ஷம் என்ற வகையைச் சேர்ந்த ஆலமரமே இங்கு ஸ்தல விருட்சமாக உள்ளது.