மூலவர்: நெடுங்களநாதர், அம்பாள்: ஸ்ரீ மங்களநாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் நெடுங்களநாதர். குட்டையான லிங்க பாணத்தையும் சதுர ஆவுடையாரையும் கொண்டு தரிசனம் தரும் அழகிய லிங்கத் திருமேனி. உட்புற அமைப்பில் அறுகோண வடிவம் காணப்படுவது ஒரு சிறப்பம்சமாகும். சுயம்பு லிங்க மூர்த்தம். நித்யசுந்தரேஸ்வரர் என்று போற்றப்படுகிறார். இரண்டு விமானங்களைக் காணலாம்.
மூலஸ்தானத்தில் பார்வதி தேவி அரூபமாக எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். கருவறைக்கு மேல் இரண்டு கோபுரங்கள் உள்ளன. வெளிப் பிரகாரத்தில் அம்பிகையின் சந்நிதி உள்ளது.
தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் ஸ்ரீ மங்களநாயகி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். தாமரை மலர்களை ஏந்திய மேற்கரங்களும், அபய - வரத முத்திரைகளைக் கொண்ட கீழ்க்கரங்களும் என நான்கு திருக்கரங்களுடன் கூடிய அழகான திருமேனி. ஒப்பற்றவளாகத் தவம் செய்ததால் ஒப்பிலா நாயகி எனும் திருநாமமும் இவருக்கு உண்டு.
கோஷ்டத்தில் காணப்படும் அம்மையப்பன் எனப்படும் அர்த்தநாரீஸ்வரரையும், சித்தாசனத்தில் அமர்ந்த யோக தட்சிணாமூர்த்தியையும் அவசியம் தரிசிக்க வேண்டும். மிகவும் அழகான திருவுருவங்கள். லிங்கோத்பவர் இருக்க வேண்டிய இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
பிரகார வலச்சுற்றில் உள்ள பிள்ளையார், வள்ளி - தெய்வயானை உடனாய முருகன், அப்புலிங்கம் - வாயுலிங்கம், சோமாஸ்கந்தர், ஸ்ரீ தேவி - பூ தேவி சகித வரதராஜர் ஆகிய மூர்த்தங்களைக் காணலாம். தென்மேற்கு மூலையில் அமர்ந்துள்ள வலம்புரி விநாயகரின் அழகு கண்களையும் மனதையும் விட்டு நீங்காது.
கிழக்கு சுற்றில் அமர்ந்துள்ள வாராஹிக்கு இங்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. தவறு செய்பவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் உள்ளவள் என்பதால் தண்டநாதா என்றும் அழைக்கப்படுகிறாள். இவளுக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து பிரார்த்திக்கின்றனர்.
மகா மண்டபத்தின் அருகே சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கல் உரலும் உலக்கையும் வைக்கப்பட்டுள்ளன. இதில் விரலி மஞ்சளை அரைத்து அபிஷேகம் செய்கின்றனர்.
வடமேற்கு மூலையில் ஜ்யேஷ்டா தேவி வித்தியாசமான கோலத்துடன் காணப்படுகிறாள்.
இங்குள்ள கலிக்கோப்பு எனும் லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்தால் பயிர்கள் நன்றாக விளையும். எலி மற்றும் பூச்சிகளால் பயிர்கள் அழியாது என்பர்.
வடக்கு பிரகாரத்தில் உள்ள சந்நிதியில் அகத்தீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். அருகேயுள்ள அகஸ்திய தீர்த்தம் என்றும் வற்றாதிருப்பதாகக் கூறுகின்றனர். கிழக்குப் பிரகாரத்திலுள்ள பைரவர் எங்கும் காணக் கிடைக்காத தரிசனம். பைரவரின் காலில் சர்ப்பங்கள் சுற்றிக் கொண்டிருப்பதைக் காணலாம்.
விசேஷ மூர்த்தியாக கருப்பண்ணசுவாமி எழுந்தருளியுள்ளார். இவருக்கு பானக நைவேத்தியம் செய்து அனைவருக்கும் வழங்கினால் நாள்பட்ட நோய்கள் நீங்கும் என்பர்.
சூரியன் இரு தேவிகளுடன் இருக்க, மற்ற கிரகங்கள் சூரியனை நோக்கியபடி காணப்படுகின்றன.
நெடுங்களநாதருக்கு உச்சி காலத்தில் மாதுளம்பழ முத்துக்களால் அபிஷேகம் செய்தால் நற்பலன்கள் கிட்டும் என்றும், அம்பாளுக்குச் சிறப்பு வழிபாடு செய்தால் தம்பதிகள் ஒற்றுமையாக இருப்பார்கள் என்றும் அர்ச்சகர் தெரிவிக்கிறார்.