காஷ்யப முனிவரின் இரண்டு பத்தினிகளான கத்துரு மற்றும் சுபருணை இருவரும், தங்களுக்குள் யார் அழகானவள் என்று போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். நடுவராக செயல்பட்ட காஷ்யபர் கத்துருவுக்கு சாதகமாக தீர்ப்புக் கூறினார். சுபருணை நிபந்தனைப்படி சிறைவாசம் செய்கின்றாள்.
தாயின் விடுதலை வேண்டி நின்ற சுபருணையின் புதல்வனான கருடனிடம் அமிர்தம் எடுத்துக் கொண்டுவந்தால், தாயை விடுவிப்பதாகக் கூறிய கத்துருவின் சொல்படி அமிர்தம் எடுத்த வரப் போகிறார் கருடன். அமிர்தத்துடன் திரும்பும்போது, ஏற்பட்ட இன்னல்களிலிருந்து விடுபட இவ்விறைவனை வழிபடுகிறான் கருடன். பின்னர் கொண்டு வந்த அமிர்தத்தை கொடுத்து, தாயை சிறையிலிருந்து மீட்கிறான் கருடன்.
பாலாற்றங்கரை ஓரமாக இத்தலம் உள்ளதால், (ஆறு - ஊர்) ஆற்றூர் எனப் பெயர் கொண்டு, பின் நாளடைவில் மருவி ஆத்தூர் என்றானது. பண்டைக் காலத்தில் நதிப்புறம் என்ற பெயர் வழக்கத்தில் இருந்ததாம்.