கைலாசத்தில் உமையவளுக்கு வேதங்களை போதித்துக் கொண்டிருந்தார் சிவபெருமான். கற்றுத் தந்ததை உமையவளால் திருப்பிச் சொல்ல முடியவில்லை. இதனால் கோபமுற்ற இறைவன் உமையவளை பூலோகம் சென்று வேதியரின் மகளாகப் பிறந்து முறைப்படி வேதங்களை கற்றுக் கொள்ளுமாறு பணித்தார்.
ராஜமாணிக்க சதுர்வேத புரம் எனும் ஊரிலுள்ள வேதியர் ஒருவர் பிள்ளைப்பேறு வேண்டித் தவமிருந்தார். அவருக்கு மகளாகப் பிறந்தாள் உமையவள். பூண்முலையாள் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார் வேதியர்.
மணப்பருவத்தை அடைந்ததும் பெண்ணுக்கு வரன் தேட ஆரம்பித்தார் வேதியர். அப்போது கிழ வேதியர் உருவத்தில் வந்த சிவபெருமான் பூண்முலையாளை மணக்க விருப்பம் தெரிவித்து வேதியரின் சம்மதம் பெறுகிறார்.
திருமணம் முடிந்ததும் தனது சுயரூபத்தைக் காட்டிய சிவபெருமான் பின்னர் பார்வதி - பரமேஸ்வரனாக காட்சி தந்து, கல்யாணசுந்தரராக இங்கு கோவில் கொள்ளவிருப்பதாக தெரிவித்தார். இதன் பின்னர் பூண்முலையாளாக இருந்த உமையவளிடம், 'நீ கற்றுணர்ந்த வேதங்களை கூறுவாயாக?' என கேட்டார் சிவபெருமான். உமையவளும் தாம் கற்ற வேதங்களை எடுத்துரைத்தார். ஆனால் அதன் பொருள் ஏதும் தெரியவில்லை. இறைவனே வேதங்களின் பொருளை உபதேசித்தார் என ஸ்தல வரலாறு.
கோசம் என்றால் வேதம், உத்தரம் என்றால் திரும்பப் பெறும் விடை, மங்கை என்றால் பார்வதி. இதுவே உத்தரகோசமங்கை எனப் பெயர் வந்த காரணம். உத்தரம் என்றால் உபதேசம், கோசம் என்றால் ரகசியம், மங்கை - பார்வதி என்ற பொருளில் வந்ததாகவும் கூறுவர்.
மறைகளின் பொருளை உமையவளுக்கு உபதேசிக்கும் போது, ஒளிந்திருந்து ஒட்டு கேட்டுக் கொண்டிருந்த முருகனை கடலில் பதுங்கி வாழும் மகர மீனாக மாறுமாறும், அதற்கு உடந்தையாக இருந்த பார்வதி மீனவப் பெண்ணாக மாறுமாறும் சபிக்கிறார் இறைவன். பின்னர் மீனவனாக வந்து வலைவீசி மகர மீனைப் பிடித்து, மீனவப் பெண்ணை மணந்து திருவிளையாடல் புரிவதாகவும் ஸ்தலபுராணம் குறிப்பிடுகிறது.
வலை வீசி மீன் பிடித்த படலம் நிகழ்வு இக்கோவில் வாசலில் நடந்ததால் அதனை இக்கோவிலின் வாசலில் ஐதீகமாக நடத்திக் காட்டுவர். (ஆதியில் கோவில் வாசல் வரை கடல் இருந்ததாகவும், பின்னர் கடல் உள்வாங்கிச் சென்றுவிட்டதால் தற்போது நிலப்பரப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது).
தில்லையில் உலகோர்க்கு நடனம் ஆடிக் காண்பிக்கும் முன்னரே இத்தலத்தில் தனிமையில் நடராஜர் நடனம் ஆடினார் என்பதால் இத்தலத்தை ஆதிசிதம்பரம் என்று குறிப்பிடுகின்றனர்.
ஆதியில் இத்தலத்தில் ஆயிரம் முனிவர்கள் தவம் மேற்கொண்டனர். வேதச்சுவடிகளுடன் காட்சி தந்த சிவபெருமான் அவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர்களிடம் தன்னை காண வேண்டி மண்டோதரி கடுந்தவம் மேற்கொண்டிருப்பதால், தான் இலங்கை செல்வதாகவும், ராவணன் தனது மேனியைத் தீண்டினால், இங்குள்ள வாவியின் (திருக்குளத்தின்) நடுவே தீப்பிழம்பு தோன்றும் எனக் கூறிவிட்டு சென்றார். தான் திரும்பி வரும் வரை வேதங்களின் சுவடிகளை பாதுகாத்து வருமாறும் கூறிவிட்டு சென்றார்.
அழகான பாலகனாக மண்டோதரி முன்பு தோன்றினார். ஒரு நாள் அந்த பாலகனை ராவணன் தனது கைகளால் தூக்கி கொஞ்ச முற்பட்டான். ராவணனின் ஸ்பரிசம் பட்டதும் உத்தரகோசமங்கை குளத்து நடுவே தீப்பிழம்பு தோன்றியது. இதைக் கண்ணுற்ற தவமியற்றிக் கொண்டிருந்த ஆயிரம் முனிவர்களில் 999 பேர் ஒவ்வொருவராக அக்னி பிழம்பில் விழுந்து மறைந்தனர். அவர்கள் 999 பேரும் லிங்கங்களாக மாறினர். ஆயிரமாவது லிங்கமாக சிவபெருமானே எழுந்தருளினார். அதுவே சஹஸ்ரலிங்கம்.
மீதியிருந்த ஒருவர் வேத சுவடிகளை பாதுகாக்கும் பொறுப்பிலிருந்ததாலும், இறைவன் வந்ததும் அவரிடம் அவற்றை ஒப்படைத்து விட்டு தானும் நெருப்பில் மூழ்கினார். பிற்காலத்தில் மாணிக்கவாசகராக திருவாதவூரில் அவதரித்து பாண்டிய நாட்டில் அரிமர்த்த பாண்டியனின் அமைச்சராகும் பெருமையை பெற்றார்.
திருக்குளக்கரை அருகேயுள்ள ஸ்தல விருட்சமான இலந்தை மரம் 3000 ஆண்டுகள் பழமையானது. ஆண்டிற்கு ஒரு கனியை மட்டுமே தரும் சிறப்பைக் கொண்டது இந்த மரம். இதை சுற்றி வந்து வழிபட புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பர். இங்கு அமர்ந்த நிலையில் மாணிக்கவாசகர் காணப்படுகிறார்.
மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் குருந்தமரமும் சந்நிதியும் சாந்நித்யம் உடையவை. துர்வாசரின் சாபம் பெற்ற ப்ருகு முனிவரும் அவரது தந்தையாரான வருண பகவானும் சாபவிமோசனம் பெற்ற ஸ்தலம். உத்தரகோசமங்கை இறைவனை வழிபட்டு நளமகாராஜா, இழந்த தனது நாடு - மனைவி அனைத்தையும் பெற்றதாக வரலாறு. பிரம்மனுக்காக பொய்யுரைத்த தாழம்பூ சாபநிவர்த்தி பெற்ற ஸ்தலம். மூலவருக்கு இங்கு தாழம்பூ சாத்தி வழிபடலாம் எனக் கூறப்படுகிறது.