தாத்ரிவனம் (நெல்லிக்காடு) எனப்படும் ஊர்க்காட்டில் எண்ணற்ற மரம் - செடி - கொடிகளும், கொடிய துஷ்ட மிருகங்களும் நிறைந்துள்ளது. இவ்வனத்தில் பன்றிமுகி எனும் ராட்சஸி எல்லோரையும் இம்சிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். பாதிக்கப்பட்டவர்கள் அகஸ்தியரிடம் முறையிட்டனர்.
அகஸ்தியர் இத்தலத்திற்கு வந்து பெரிய வேள்வி ஒன்றை நடத்தினார். வேள்வியிலிருந்து பெரிய அளவிலான பூத மனிதனை உருவாக்கினார். அவன் பன்றிமுகியுடன் போர் புரிந்து அவளது உயிரை எடுத்தான். பன்றிமுகி வதம் முடிந்ததும், பூத மனிதனை இங்கேயே இருந்து இப்பகுதிக்குக் காவல் தெய்வமாக இருக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். ஊர்க்காட்டு மாடசாமி என்ற பெயரில் பூத மனிதன் இங்கேயே நிலை கொண்டான்.
அகஸ்தியரும் அவரது மனைவியான லோபமுத்ரையும் இங்கு ஒரு சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட எண்ணி, மணலைப் பிடித்து உருவாக்க முற்பட்டனர். அத்ரி மகரிஷி, நாரதர், ஹயக்ரீவர் ஆகியோரும் பங்கேற்றனர்.
ஒவ்வொரு முறை மணலைத் திரட்டி லிங்கம் பிடிக்க முற்படும்போதும் மணல் கலைந்துவிடும். அடுத்தடுத்து பல முறை முயன்றும் பலன் இல்லாததால், அகஸ்தியர் சிவபெருமானிடமே முறையிட்டார். 'பிரதிஷ்டை செய்யும் முயற்சியில் ஏன் கோட்டி செய்கின்றீர்?' என இறைவன் வினவினார். கோட்டி என்றால் பிடிவாதம் மற்றும் ஒன்று சேர்த்தல் எனப் பொருள். பின்னர் மணலைத் திரட்டி தனது மார்புடன் அணைத்துக்கொண்டார் அகஸ்தியர்.
முனி தீர்த்தம் ஒன்றை ஏற்படுத்தினார். 'தினமும் ஆலிங்கனம் செய்த அடையாளத்துடன் எழுந்தருள்வேன். எமது சிரசில் இருக்கும் சந்திரப்பிறையிலிருந்து நீர்த்திவலைகள் லிங்கத்திருமேனி மீது சொட்டியபடி இருக்கும். இது பிந்துஸ்தானம் என வழங்கப்படும்' என அருளாசி வழங்கி மறைந்தார்.