சுற்றிலும் சிறிய மலைக்குன்றுகள், தென்னை, வாழை, நெற்பயிர்கள் சூழ்ந்த வளமான பூமியில் 250 அடி உயரமுள்ள பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. தெளிந்த நீரோடைகளும் இருக்கின்றன. குன்றின் மீது ஏற படிக்கட்டுகள் அமைத்துள்ளனர். காரில் போக சரிவுப் பாதைகளும் உள்ளன.
ஸ்ரீ சங்கட ஹர விநாயகரிடம் ஆசி பெற்று, இடும்பனையும் தரிசித்துக்கொண்டு குன்றின் மீது ஏறுகின்றனர்.
மூலஸ்தானத்தில் மூலவரான ஸ்ரீ தண்டாயுதபாணி ஞானஸ்கந்தக் கோலம் கொண்டு கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். ஐந்தரை அடி உயரம் கொண்ட வரப்பிரசாதி. வலக்கரத்தில் தண்டம் ஏந்தியுள்ளார். தாமரைத் திருவடிகளை தரிசிக்க ஆனந்தம் கிடைக்கிறது.
கருவறையின் வலப்புறமாக வல்லபை கணபதி பத்துக் கரங்களுடன் தரிசனம் தருகின்றார். நால்வர் மற்றும் அருணகிரிநாதரை மண்டபத்தில் காணலாம். மேல் தளத்தில் ஸ்ரீ ஜட்ஜ் ஸ்வாமிகளின் திருவுருவம் காணலாம்.
நேர் எதிரேயுள்ள சந்நிதியில் அஷ்டதசபுஜ மஹாலட்சுமி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். ஆறரை அடி உயரமும் ஒரு டன் எடையும் கொண்ட அழகிய பஞ்சலோக விக்ரஹம். தனது பதினெட்டுக் கரங்களில் அட்சமாலை, தாமரை, பாணம், வாள், வஜ்ராயுதம், கதாயுதம், சக்கரம், திரிசூலம், பரசு, சங்கு, மணி, பாசம், வேல், தண்டம், வில், கேடயம், பாணபத்ரம், கமண்டலம் ஆகியன கொண்டுள்ளார்.
தாமரை மலர் மீது நிற்பதால் மஹாலட்சுமியாகவும், அட்சமாலை மற்றும் கமண்டலம் இவற்றை கொண்டுள்ளதால் சரஸ்வதியாகவும், பிற ஆயுதங்களால் துர்க்கையாகவும் விளங்குகிறாள். திருவாசியில் நவதுர்க்கைகளின் திருவுருவங்கள் இருக்கின்றன.
பஞ்சமுக விநாயகர் சிம்மத்தின் மீது வீற்றிருக்கின்றார். ஹேரம்ப கணபதி அழகாகக் காட்சியளிக்கின்றார். பஞ்சமுக ஆஞ்சநேயர், தத்தாத்ரேயர், தன்வந்த்ரி, ஸ்வர்ணாகர்ஷண பைரவர் ஆகிய திருவுருவங்கள் வியக்க வைக்கும் சிலைகள். இவை யாவும் பிரம்மாண்டமான திருவுருவங்களாகக் காட்சியளிக்கின்றன.
ஐயப்பன், ஜட்ஜ் ஸ்வாமிகள், ஆதி சங்கரர், ராமாநுஜர், வியாசர், மாத்வர், அத்ரி, நாரதர், ராகவேந்திரர், வள்ளலார், தத்தம் தர்மபத்னிகளுடன் நவகிரகங்கள் என அநேக மூர்த்தங்களை இங்கு தரிசிக்கலாம்.
குன்றின் கீழே கன்னிமார் ஓடை எனும் வற்றாத நீருற்று உள்ளது. கன்னிமார் சிலையும் உள்ளது.
பாறையையொட்டி சப்த கன்னிமார்கள் எழுந்தருளியுள்ளனர். கார்த்திகை மாதத்தில் நடக்கும் ஸ்கந்த ஜோதி பிரசித்தமானது.