இவ்வூர் மக்கள் ஒழுக்கமாக வாழ்ந்திருந்ததைச் சிறப்பித்துக் கூறும் வகையில் இவ்வூருக்கு 'ஒழுகறைப்பட்டு' எனப் பெயர் இருந்ததாம். அதுவே காலப்போக்கில் மருவி 'ஒழுந்தியாப்பட்டு' என மாறி உள்ளதாகக் கூறுகின்றனர்.
அரசிலிநாதர் மீது மிகுந்த பிரியமும் பக்தியும் வைத்திருந்தான் சாளுக்ய மன்னன். அவருக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்வதற்கு என ஒரு நந்தவனத்தையும் உருவாக்கினான்.
ஒரு நாள் இறைவன், மான் உருவில் நந்தவனத்திற்குள் பிரவேசித்தார். மானைத் துரத்திக் கொண்டு ஓடி வந்தான் மன்னன். ஸ்தல விருட்சத்தின் கீழுள்ள புற்று ஒன்றில் ஒளிந்து கொண்டது மான். தனது அம்பால் புற்றைக் கிளறலானான் மன்னன். புற்றினுள் சுயம்புவாக இருந்த சிவலிங்கத் திருமேனியைக் கண்ட மன்னன் ஆனந்தித்தான். புற்றைக் கிளறியதால், லிங்கத்திற்குப் பின்னம் ஏற்பட்டது.
மூலவரது நெற்றியில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. இன்றளவும் இந்தக் காயத்தைக் காணலாம். இதனால் வருத்தமுற்ற மன்னன், இவ்விறைவனுக்குக் கோயில் எழுப்பினான் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
இந்த நிகழ்வு ஒரு பிரதோஷ நாளில் நிகழ்ந்தது. இதனால் இத்தலம் ஒரு பிரதோஷ க்ஷேத்திரமாக விளங்குகிறது. (சூரிய அஸ்தமனத்திற்கு மூன்றேமுக்கால் நாழிகை முன்னதாகச் சிவ தரிசனம் செய்வது புண்ணியம்)
தேவாரத் திருத்தலம்.