தான் மிகவும் அழகாக இருப்பதினால், கர்வம் கொண்ட மகாலட்சுமி திருமாலிடம் தர்க்கம் செய்கிறாள். புற அழகிற்கு முக்கியத்துவம் தரும் லட்சுமிக்கு, தகுந்த பாடம் புகட்ட எண்ணிய திருமால், "உனது அழகு ரூபம் மறைந்து அரூபமாகப் போவாய்" என சாபம் கொடுக்கிறார்.
சாப விமோசனம் வேண்டி பூலோகம் வந்த மகாலட்சுமி, காஞ்சி காமாட்சி ஆலயத்தினுள் அமர்ந்து தவம் செய்கின்றாள். சாபத்தால் கரிய நிறம் கொண்ட மகாலட்சுமி, உமையவளை வழிபடுகிறாள்.
காமாட்சியின் யோசனைப்படி, தனது கருமையை சாந்தாக பதிவு செய்து வைக்கின்றாள். சேவார்த்திகள் அதை திலகமாக அணிவதாலும், திருமாலின் கிருபையாலும் அரூப வடிவம் நீங்கி, மீண்டும் அழகு பெற்று சௌந்தர்ய லட்சுமியாகிறாள்.
சௌந்தர்ய லட்சுமியைக் காண வந்த திருமால் ஒளிந்து கொண்டு பார்த்ததால், கள்வர் என திருநாமம் கொண்டார். காமகோட்டத்து பஞ்சகங்கை தீர்த்தக் கரையில் காமாக்ஷியும் - லட்சுமியும் பேசிக் கொண்டிருந்ததை ஒளிந்திருந்து கேட்டதால் கள்வர் எனப் பெயர் கொண்டதாகவும் கூறுவர்.