முன்னொரு காலம், கயிலையில் சிவபெருமான் தாண்டவம் ஆடுகையில், பூத கணங்கள் பரிகசித்து சிரித்தன. இதனால் கோபமுற்ற சிவபெருமான் பூத கணங்களை சபித்து, தன்னை விட்டு விலக்கி விட்டார்.
வருத்தம் கொண்ட பூத கணங்கள், பிரம்ம தேவரின் ஆலோசனைப்படி, பூலோகம் வந்து, இத்தலத்திலுள்ள அருணாரண்ய க்ஷேத்ரத்தில் தவமிருந்தன. ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் பிரத்யட்சமாகி, பூதங்களின் சாபத்தைப் போக்கி, சிவபெருமானிடம் திருப்பி அனுப்பி வைத்தார் என ஸ்தல வரலாறு.
அநந்தன் (ஆதிசேஷன்) சிருஷ்டித்த தடாகமான அனந்த சரஸ்ஸில் நீராடி பாபங்களைப் போக்கிக் கொண்ட ஹரிதன் என்பவன் தனது கோ - தோஷம் நீங்கப் பெற்றான். பூதங்களும் இதில் நீராடின. பூதங்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த புண்ணிய நகரம் உண்டாக்கப்பட்டதால் இதை பூதபுரி என்றும் ஸ்ரீ பெரும்புதூர் என்றும் அழைக்கின்றனர் என ஸ்தல வரலாறு.
வசிஷ்டாத்வைத சித்தாந்த ஸ்தாபகரான ஸ்ரீராமாநுஜர் அவதரித்த ஸ்தலம். ஸ்ரீராமாநுஜர் - ஆதிசேஷனின் அம்சம் என்பதால் ராஹு - கேது சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்குகிறது.
சித்திரை மாத திருவாதிரையில் ஸ்ரீ ராமாநுஜரின் அவதார உற்சவம், திருமேனி திருமஞ்சனம் காண்பது மிகுந்த புண்ணியம் என்பர்.
12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவில். தென்கலை சம்ப்ரதாயம். வைகானஸ ஆகமம் பின்பற்றப்படுகிறது.
அபிமான ஸ்தலம்.