சப்த ஸ்தான ஸ்தலங்களுள் மூன்றாவது ஸ்தலம். இந்திரன், சூரியன், கௌதமர் வழிபட்ட ஸ்தலம். இங்கு ஆஸ்ரமம் அமைத்திருந்த கௌதம மகரிஷி தினமும் இங்கிருந்து திருவையாறு சென்று ஐயாறப்பரை தரிசித்துவிட்டு வருவது வழக்கம்.
மழை பொய்த்ததால் ஆற்றில் நீர் வரத்துக் குறைந்து விளைச்சல் இன்றி மக்கள் அவதியுற்றனர். இதனால் பஞ்சம் ஏற்பட்டு, மக்கள் தங்கள் கஷ்டங்களை கௌதமரிடம் எடுத்துரைத்தனர். மக்களின் குறைகளை இறைவனிடம் சொல்லி பிரார்த்தித்தார் மகரிஷி. இறைவன் உமையன்னையுடன் எழுந்தருளி, அன்னம் தயாரித்து மக்களின் பசியைப் போக்கினார் என ஸ்தல வரலாறு. இதனால் ஓதனவனேச்வரர் என்ற பெயர் இறைவனுக்கு வந்தது. ஓதனம் என்றால் அன்னம்.
அருளாளர் எனும் சிவனடியார், மக்கள் பசியால் துடிப்பதைக் காண சகியாது, அனைவர்க்கும் உதவுமாறு இறைவனிடம் மனமுருக வேண்டி பிரார்த்தித்தார். பிரத்யட்சமான இறைவன் உலவா சோற்றுக் கலம் (அட்சய பாத்திரம்) ஒன்றை அருளாளனுக்கு வழங்கினார். அள்ள அள்ளக் குறையாமல் அதிலிருந்து வெளி வந்த உணவை, அனைவர்க்கும் வழங்கி, பசியைப் போக்கினார் என்றும் கூறப்படுவதுண்டு.
சப்த ஸ்தான பல்லக்கு விழாவின்போது, திருவையாற்று பெரிய பல்லக்கும், மாப்பிள்ளை பல்லக்கும் திருப்பழனத்து பல்லக்கை அழைத்துக் கொண்டு இவ்வூருக்கு வரும். சோற்றுத்துறை நாதரும், அன்னபூரணியும் இவர்களை எதிர் கொண்டழைத்து வந்து, ஊருக்குள் வலம் வந்து, பின் எல்லோருமாக ஒன்று சேர்ந்து திருவேதிகுடி செல்வார்கள்.
ஊருக்கு தெற்கே சோற்றுடையான் வாய்க்கால் ஓடுகிறது.
தேவாரத்திருத்தலம் - சப்த ஸ்தான ஸ்தலங்களுள் ஒன்று.