ஊழிக்காலத்துப் பெரு வெள்ளத்திலும் அழியாது நீடித்து இருந்ததால் 'நீடூர்' எனப் பெயர் பெற்றது. மகிழ மரங்கள் மிகுந்து காணப்பட்டதாலும், ஸ்தல விருட்சம் மகிழ மரமானதாலும் 'வகுளாரண்யம்' எனப் பெயர் கொண்டது.
பூலோகத்தில் பயணித்துக் கொண்டிருந்த இந்திரன் இத்தலமருகே வந்தபோது சிவபூஜை செய்யலாமென லிங்கத்தைத் தேடினான். ஒன்றும் கிடைக்காததால் காவிரி ஆற்று மணலை எடுத்து லிங்கம் ஒன்றை உருவாக்கி சிவபூஜை செய்தான். அதையே பிரதிஷ்டை செய்து வழிபட்டான். சிவநடன தரிசனம் பெற பிரார்த்தனை செய்தான். அவனது வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன் பிரத்யட்சமாகி நடனம் ஆடி காண்பித்தார் என வரலாறு. இதனால் 'கான நர்த்தன சங்கரன்' என்ற பெயர் வந்தது.
தனக்கு சாரூபம் வேண்டும் என கடுந்தவம் மேற்கொண்டான் சந்திரன். பிரத்யட்சமான இறைவன், "பகலில் சூரியன் ஒளி தருவது போல் இரவில் நீ ஒளி தருவாயாக" என வாழ்த்தி வரமளித்தார். பொன்னாலான தேர் ஒன்றினையும் தந்தார்.
பின்னர் தட்சனின் சாபத்தால் அத்தனையும் இழந்துவிட்டு, மிருத்யுஞ்ச மந்திரம் ஜபித்து மீண்டும் தவம் இருந்தான் சந்திரன். அவனது ஒற்றைக் கலையை தனது ஜடாமுடியில் தரித்து அபயமளித்து, "வளர்பிறை - தேய்பிறை உனது இயல்பாகிவிடும், இதுவும் உலக நன்மைக்கே" என ஆசிர்வதித்தார். சோமனுக்கு அருள் செய்ததால் 'அருட்சோமநாதர்' ஆனார்.
நண்டாகப் பிறந்த அசுரன் ஒருவன் பூர்வ ஜென்ம பாவங்களைப் போக்கிக் கொள்ள இவ்விறைவனை வழிபட்டு, இறைவனருளால் லிங்கத்திருமேனிக்குள் துளையிட்டுக் கொண்டு சென்று ஐக்கியமானான். ஆடி மாத பௌர்ணமியில் கற்கடக பூஜை நடத்துகின்றனர். பங்குனியில் 10 நாட்கள் பிரம்மோற்சவம்.
முனையடுவார் நாயனார் அவதரித்து, தொண்டு செய்து, முக்தி பெற்ற ஸ்தலம்.
இது ஒரு தேவாரத்திருத்தலம்.