பரம ஏழையான பெரியான் என்பவன் உழவு வேலை செய்பவன். சிவனடியார்களுக்கு அமுதூட்டுவதை பெரும் பணியாக செய்பவன். ஒரு நாள், பெரியான் தனது நிலத்தில் உழுது கொண்டிருந்தபோது, அடியவர் வடிவில் வந்த சிவபெருமான் தனக்கு மிகவும் பசிப்பதாக கூறினார். விதைப்பதற்காக கொஞ்சம் தினை மட்டுமே வீட்டில் வைத்திருந்தான் பெரியான். வந்த அடியவரை சற்று ஓய்வெடுக்கும்படி கூறிவிட்டு, வீட்டிற்கு சென்று தனது மனைவியிடம் தினையை சமைத்து தரும்படி கூறி, சமைத்ததை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
இங்கு வந்து பார்த்தால், அவன் உழுது கொண்டிருந்த நிலத்தில் தினை விளைந்து, கதிர்கள் முற்றி இருக்கும் அதிசயத்தை கண்டான். இருப்பினும் அதில் கவனம் செலுத்தாமல், மரத்தடியில் படுத்துக் கொண்டிருந்த அடியவரை எழுப்பி உணவு பரிமாறினான். அடியவராக வந்த சிவபெருமான் அன்புடன் உண்டார்.
ரிஷபாரூடராய் காட்சி தந்த சிவபெருமான் பெரியானை தன்னுடன் அழைத்துக் கொண்டார். இங்கு இறைவனுக்கு தினை நைவேத்தியம் செய்யப்படுகின்றது. இத்தலத்திற்கு தினைநகர் எனப் பெயர் ஏற்பட்டது.
மூலஸ்தானத்து தெற்கு சுவரில் - பெரியான் தினை விதைத்தல், தினை விளைந்திருத்தல், இறைவன் காட்சி தருதல் ஆகியன புடைப்பு சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
இது ஒரு தேவாரத்திருத்தலம்.