பெரிய பிராட்டியார் லட்சுமி தேவி பரந்தாமனிடம் பிரார்த்தித்து ஒரு கோரிக்கை விடுத்தாள். தான் செங்கோல் ஏந்தி பரிபாலனம் செய்ய வேண்டும், தனக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை. பூலோகம் சென்று ஸ்வேதகிரி எனப்படும் இத்தலத்தில் காத்திருக்குமாறு பரந்தாமன் கூறினார்.
இத்தலத்திலுள்ள பூங்கிணறு அருகேயுள்ள குகையில் இருந்து கொண்டு நோன்பியற்றி, தவமிருந்தாள் பிராட்டி. மார்க்கண்டேய மகரிஷி, பூமி தேவி, சிபி சக்ரவர்த்தி, பெரிய திருவடி ஆகியோருக்குச் சேவை சாதிக்க வந்த பரந்தாமன், திருமகளுக்கும் காட்சி தந்தார். அவள் கோரிய வரத்தை அளித்தார்.
இத்தலத்தில் புண்டரீகாட்சர் என்ற யோகி பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்து கொண்டு ஆராதித்து வந்தார். அவருக்குப் பிரத்யட்சமான பெருமாள், யோகியின் வேண்டுகோளுக்கிணங்க 'புண்டரீகாட்சர்' என்ற திருநாமத்தோடு இங்கேயே கோவில் கொண்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
ஸ்வேதகிரி எனப்படும் வெள்ளறை எனும் இத்தலத்திலுள்ள வனத்தில் தனது படையுடன் தங்கியிருந்தார் சிபிச் சக்கரவர்த்தி. அப்போது ஸ்வேத வராஹம் (வெள்ளைப் பன்றி) ஒன்று அவர் முன்னால் ஓடியது. அதைத் துரத்திக் கொண்டு வெகு தூரம் ஓடினார் சக்கரவர்த்தி. நான்கு திசைகளிலும் ஓடிய வராஹம் திடீரென ஒரு புற்றுக்குள் மறைந்தது.
புற்றினருகே மார்க்கண்டேய மகரிஷி தவம் செய்து கொண்டிருந்தார். மகரிஷியின் யோசனைப்படி புற்றுக்குத் திருமஞ்சனம் செய்தார் சிபி. அவர்களுக்குத் திருமகள் காட்சி தந்தாள். பெருமாளும் அவர்கள் முன் தோன்றி, பிராட்டிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ஒரு கோவில் நிர்மாணிக்குமாறு பணித்தார். பின்னர் அர்ச்சாரூபமாய் எழுந்தருளி விட்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
வராஹம் ஓடிய இடமெல்லாம் தீர்த்தம் அமைத்து, இக்கோவிலை நிர்மாணித்தார் சிபிச் சக்கரவர்த்தி. இத்தலத்தில் பங்கஜவல்லித் தாயாரே ஆட்சி செலுத்துகிறார். உற்சவங்களில் தாயார் முன்னே செல்ல, பெருமாள் பின்னால் போவார். வீதிவுலா முடித்து பெருமாள் 'நாழி கேட்டான் வாசலில்' நின்று, தாயாரிடம் எத்தனை நாழிகை ஆயிற்று எனச் சொல்லி விட்டுப் போகும் ஐதீகம் தொடர்கிறது.
திருவெள்ளறை வந்து பெருமாளைச் சேவித்த பின்னரே மோட்சம் என்ற ஐதீகத்தை வைணவர்கள் சம்பிரதாயமாகப் பின்பற்றுகின்றனர் என ஒரு குறிப்பு கூறுகிறது. இது வராஹ அவதார க்ஷேத்திரம் என்பர்.
உய்யக்கொண்டான் மற்றும் எங்களாழ்வான் அவதாரத் தலமாகும்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று.