அடுத்தடுத்து இரண்டு கோவில்கள் இருப்பதால் இதை இரட்டை திருப்பதி என்பார்கள். வடக்கு கோவில் - தெற்கு கோவில் என்று அழைக்கின்றனர்.
துலைவில்லி மங்கலத்தில் யாகம் நடத்திய சுப்ரப முனிவர், அங்குள்ள தேவர்பிரான் சந்நிதிக்கு வடக்கே உள்ள பொய்கையின் தாமரைப் பூக்களைப் பறித்துச் சென்று எம்பெருமானுக்குச் சாற்றி மகிழ்வது வழக்கம். ஒரு நாள், அவரைப் பின்தொடர்ந்து தாமரைப் பொய்கைக்கு வந்த எம்பெருமான், பொய்கையும் அதன் சுற்றுப்புறமும் அழகாக இருப்பதைக் கண்ணுற்று, குளிர்ச்சியான இச்சோலையில் தாம் எழுந்தருள விரும்புவதாகத் தெரிவித்துவிட்டு, அரவிந்தலோசனராகக் கோவில் கொண்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
யாகங்களின் மூலம் கிடைக்கும் பலன்கள் யாவும் தேவர்களையே சென்றடைகிறது - எங்களுக்கு ஹவிர்பாகம் தருவதில்லை என அஸ்வினி தேவர்கள் பிரம்மனிடம் முறையிட்டனர். பிரம்ம தேவரின் யோசனைப்படி துலைவில்லி மங்கலத்திற்கு வந்த அஸ்வினி தேவர்கள், அங்கு தவமிருந்தனர். பிரத்யட்சமான அரவிந்தலோசனர் அவர்களுக்கும் ஹவிர்பாகம் கிடைக்க அருள் புரிந்தார்.