ஸ்தல புராணம்: ஒரு சமயம், ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் நடந்த பலப்பரிட்சையில், மாமேருவை ஆதிசேஷன் சுற்றி வளைத்துக் கொண்டான். அதனை அவனது பிடியிலிருந்து விடுவிக்கும் போட்டியில் வாயுதேவன், பலமாக காற்றை வீசி, மாமேருவின் சிகரத்தை அசைத்துப் பறக்கடித்தான். அந்த சிகரத்தில் ஒன்று வந்து விழுந்த இடமே சிரகிரி மலை எனப்படும் சென்னிமலை.
பஞ்சம் பிழைக்க இவ்வூருக்கு வந்த செங்கத்துறையான் என்பவன், பண்ணையாரிடம் வேலைக்கு சேர்ந்து மாடு மேய்ப்பதை அன்றாடம் செய்து வந்தான். ஒரு நாள் மலை மீது மாடு மேய்ந்து கொண்டிருந்தபோது, "எனக்குப் பசிக்கிறது... நான்தான் சென்னியாண்டவன்" என அசரீரியாக ஒலித்தது. காராம்பசுவின் பாலைக் கறந்து, "இந்தா, இதைக் குடித்துப் பசியாற்றிக்கொள்" என்றான் செங்கத்துறையான். இந்த செயல் அன்றாடம் நிகழ்ந்தது.
"தினமும் நான் உனக்குப் பால் தருகிறேன்... நீ என் கண்ணுக்குத் தெரிவதில்லையே" என அங்கலாய்த்தான் செங்கத்துறையான். பெரிய ஒளிப் பிழம்பாக தோன்றி அவனுக்குக் காட்சி தந்தார் சென்னியாண்டவர். அவர் காட்சி தந்த இடத்தில் அவருக்குக் கோயில் கட்ட ஆசைப்பட்டான் செங்கத்துறையான். மக்களிடம் நிதி திரட்டி கோயில் கட்ட தயாரானான். இவ்வூர் அருகேயுள்ள ஒட்டப்பாறை எனுமிடத்திலுள்ள குன்றின் மீது இடி விழுந்து பிளவுபட்டு, செங்கத்துறையான் கட்டும் கோயிலுக்குப் பாறைகளாகின. இவ்வாறாக பணமும், பொருளும் சேர்த்து மலை மீது கோயில் எழுப்பினான். இவனை மக்கள் நிலத்தம்பிரான் என்று அழைத்தனர். மலையடிவாரத்து கைலாசநாதர் கோயிலுக்குக் கதவுகள் செய்து போட்டு மகிழ்ந்தான் செங்கத்துறையான்.
சோழமன்னன் ஒருவன் தன்னை பிடித்த பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட வேண்டி இத்தலத்திற்கு வந்தான். அர்ச்சகர் யாரும் அப்போது இல்லாததால், சகுனத் தடையாகக் கருதி மனம் வருந்தினான். முருகனே அர்ச்சகராக வந்து பூஜை செய்து, அவனது பிரம்மஹத்தி தோஷத்தை போக்கினார் என ஸ்தல வரலாறு.
அருணகிரிநாதருக்குப் படிக்காசு தந்தருளிய ஸ்தலம். கந்தசஷ்டி கவசம் அரங்கேறிய ஸ்தலம்.