காரை முட்செடிகள் மிகுந்து காணப்பட்ட பகுதியானதால் காரைக்காடு என வழங்கப்பட்டது.
தற்போது திருக்காலீஸ்வரன் கோவில் என அழைக்கப்படுகின்றது. வேப்ப மரங்களும் அடர்ந்து இருந்தமையால்
திருக்குளம் வேப்பங்குளம் என்று அழைக்கப்படுகின்றது. நல்ல தண்ணீர்.
சந்திரனுக்கும், தாரைக்கும் பிறந்த புதன் இவ்விறைவனை வழிபட்டு கிரக பதவி பெற்றதாக வரலாறு.
புத கிரக தோஷ நிவர்த்தி பெற பக்தர்கள் வருகின்றனர்.
கௌதம மகரிஷியின் மனைவி அகல்யா மீது ஆசை கொண்ட தேவேந்திரன், அவளை அடைய எண்ணி
வஞ்சகமான திட்டத்துடன், சேவல் உருவம் கொண்டு கூவினான். பொழுது விடிந்ததென எண்ணிய
கௌதமர் ஆஸ்ரமத்தை விடுத்து நீராடச் சென்றார்.
அவர் சென்றவுடன், சேவல் உருவில் இருந்த இந்திரன் கௌதமரின் தோற்றம் கொண்டு அகல்யாவிடம்
சென்றான். இந்நிகழ்ச்சியை தனது தவ வலிமையினால் தெரிந்து கொண்ட மகரிஷி சினமுற்று இருவரையும்
சபித்தார். அகல்யா கல்லாக மாறினாள். இந்திரன் உடல் முழுதும் கண்கள் பெற்றான். தவற்றிற்கு வருந்தியும்,
சாப விமோசனம் பெற வேண்டியும், இத்தலத்திற்கு வந்த இந்திரன் இவ்விறைவனை வழிபட்டு சாபம் நீங்கப்
பெற்றதாக ஸ்தல வரலாறு.