மூலவர்: சற்குணநாதேஸ்வரர், அம்பாள்: சர்வாங்கசுந்தரி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் மூலவரான சற்குணநாதேஸ்வரர். அழகான பெரிய திருவுருவம். நாகாபரணங்களுடன் கம்பீரமாக தரிசனம் தருகின்றார். சற்குணேச்வரர் என்ற பெயரும் உண்டு. பரிபூரணனாக ஸ்வாமி விளங்குவதால் ஸ்வாமி சந்நிதியில் அமைதி நிலவுகிறது. சத்திய குணங்கள் கொண்டவர்களை ரட்சிப்பதாலும், சற்குண மன்னனுக்கு காட்சி தந்ததாலும் சற்குணநாதேஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார்.
ஸ்வாமி சந்நிதியின் இருபுறமும் தனகணபதியும் பாலமுருகனும் எழுந்தருளியுள்ளனர். கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர் மற்றும் தட்சிணாமூர்த்தியை தெற்கிலும், பிரம்மா, துர்க்கை, பைரவர் ஆகிய மூர்த்தங்களை வடக்கிலும் தரிசிக்கலாம்.
கிழக்கு பார்த்த தனி சந்நிதியில் அம்பாள் சர்வாங்க நாயகி எழுந்தருளியுள்ளார். ஆறடி உயரம் கொண்ட அழகிய திருமேனி கொண்டு தரிசனம் தருகின்றாள். ஈஸ்வரனைக் கவர எல்லா அழகையும் தன்னுள் கொண்டு வந்தவள் போல், உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அற்புதமான வடிவம். கண்களையும் மனசையும் விட்டகலாத அபூர்வ விக்ரஹம். கருவறை வாசலில் விநாயகரை தரிசிக்கலாம். கருவிலியின் ஹ்ருதய ஸ்தானமாக விளங்கும் கருவறை.
தீபாராதனை காண்பிக்கும்போது சர்வாங்கசுந்தரியின் திருமுகத்தை தரிசித்து விட்டால் மனம் முழுவதும் பூரண திருப்தி ஆக்ரமித்துக் கொள்கிறது.
அம்பாள் கோவில் மண்டபத்தில் சூரியன், சந்திரன், பாலசுப்ரமண்யர் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். நிற்கும் கோலத்தில் கணபதி, சிவகாமி உடனாய நடராஜப் பெருமான் மற்றும் உற்சவ மூர்த்திகள் அனைத்தும் பேரெழில் கொண்டவை. இவ்வாலயத்து சிற்பங்கள் அனைத்துமே கலையழகுடனும் சிறந்த வேலைப்பாடுகள் உடையனவாகவும் இருக்கின்றன.