ஹேம ரிஷியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய, திருமால் வைகுந்தத்திலிருந்து சார்ங்கத்தை கையில் எடுத்துக் கொண்டு பூலோகம் வந்ததாக ஐதீகம். ஹேம ரிஷியின் புத்ரியாகத் தோன்றித் தவம் புரிந்த கோமளவல்லித் தாயாரை மணந்ததாக ஸ்தல வரலாறு.
ஹேம புஷ்கரிணி எனப்படும் பொற்றாமரைக் குளக்கரையில் ஹேம ரிஷிக்கு ஒரு சந்நிதி உள்ளது.
சார்ங்க வில்லுடன் சேவை சாதிப்பதால் சாரங்கபாணி எனும் திருநாமம் கொண்டார்.
திருமழிசை ஆழ்வார் ஆராவமுதனை சேவிக்க இத்தலத்திற்கு வந்தபோது, பெருமாள் அசையாது உறங்குவது கண்டு, வராஹ மூர்த்தியாய் அசுரனை வதைத்துப் பூமியை மீட்டுக் கொண்டு வந்த ஆயாசத்தில் இப்படி அசையாது படுத்து உறங்குகிறாரோ என்று வினவுகிறார். நீங்கள் படுத்துறங்கும் காரணத்தை, படுத்திருந்தபடியே எனக்கு விளக்க வேண்டும் என விண்ணப்பித்தார்.
'நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞாலம் ஏனமாய் இடந்த மெய் குலுங்கவோ? விலங்கு மால் வரைச் சுரம் கடந்த கால் பரந்த காவிரிக் கரைக் குடந்தையுள் கிடந்தவாறு எழுந்திருந்து பேசு' எனப் பாடினார்.
இந்த விண்ணப்பத்தைக் கேட்ட பெருமாள் எழுந்திருந்து பேச முயல, ஆழ்வாரும் பெருமாளின் அதிசௌலப்யத்திற்கு ஒரு குறையும் நேராதபடி 'வாழிகேசனே' என மங்களாசாஸனம் செய்தார்.
அன்று முதல் திருமழிசையாழ்வாருக்கு பதில் கூற கிடந்தவாறு எழுந்திருந்த அதே கோலத்தில் சேவார்த்திகளுக்கும் சேவை சாதிக்கின்றார் என ஸ்தல வரலாறு.
வீரநாராயணப் பெருமாளை சேவிக்க காட்டுமன்னார் கோவில் போன யாத்ரிகர்களில் ஒருவர், பெருமாள் சந்நிதியில் 'ஆராவமுதே' எனத் தொடங்கும் திருக்குடந்தைப் பதிகத்தை பாடத் தொடங்கி, 'ஆயிரத்துள் இப்பத்தும்' என முடித்தார். அந்த பதிகத்தின் கருத்தில் மெய் மறந்த நாதமுனிகள் மீதி பாடல்களைத் தேட ஆழ்வார் திரு நகரி சென்று மதுரகவி ஆழ்வாரின் தொடர்பு பெற்றிருந்த பராங்குசதாசர் என்பவரின் உதவியுடன் பாடல்களை சேகரித்து தொகுக்கிறார். எனவே (நாலாயிரம் பாடல்கள்) நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் தொகுக்க காரணமாயிருந்தது திருக்குடந்தைப் பதிகமே எனக் கூறப்படுகிறது.
பெருமாளுக்கு நைவைத்யமாக கும்மாயம் படைக்கின்றனர். மொச்சை, பாசிப்பயறு, உளுந்து, துவரை, கொள்ளு ஆகியவற்றை குறுநொய் போல் உடைத்து வேகவைத்து, வெல்லம் பசுநெய் சேர்த்து செய்வதே கும்மாயம் எனப்படும்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று - பஞ்ச ரங்க க்ஷேத்ரங்களுள் ஒன்று.