சப்த ரிஷிகள் இத்தலத்தில் தவம் மேற்கொண்டு முக்தி பெற்றதால் திருத்தவத்துறை எனப் பெயர் பெற்றது. மாலிக் கபூரின் படையெடுப்பு காலத்தில் இக்கோவிலின் கோபுரம் சிவப்பு வர்ணம் கொண்டிருந்ததைப் பார்த்து லால்குடி என உருது மொழியில் பெயரிட்டதாக கூறப்படுகிறது.
சப்த ரிஷிகளின் ஆஸ்ரமங்களருகே உள்ள தாமரைப் பொய்கை அருகே, தனித்து விடப்பட்ட குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்தது. அதற்கு பாலூட்டுமாறு தனது பத்தினியான அருந்ததியிடம் கூறுகிறார் வசிஷ்டர். பூஜைக்கு மலர் பறிக்க சென்று கொண்டிருந்ததால், அருந்ததி அந்த பணியை செய்யவில்லை.
கோபம் கொண்ட வசிஷ்டர் தனது மனைவியை தனிமைப்படுத்தி தண்டித்தார். மற்ற ரிஷி பத்னிகள் யாவரும் அருந்ததியை சார்ந்தும், ரிஷிகள் வசிஷ்டரை பெருமைப்படுத்தியும் வாதிட்டனர். அப்போது அழுது கொண்டிருந்த குழந்தை ஆறுமுகனாக மாறி சிரித்தான்.
சினம் தலைக்கேறி, தத்தம் பத்னிகளை விலக்கி வைத்த ஏழு ரிஷிகளும் தங்களது பிழை பொறுத்து மன்னித்தருள வேண்டினர். பின்னர் முருகனின் ஆலோசனைப்படி, தவமிருந்து இவ்விறைவனை வழிபட்டனர். அவர்களை தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்ட இறைவன் என்பதால், இவ்விறைவன் சப்தரிஷீஸ்வரர் என்ற பெயரைக் கொண்டார்.
தேவார வைப்புத்தலம்.