ராவண சம்ஹாரத்திற்கு உதவியாக இருந்தவர்களுக்குத் தமது அன்பையும், பாராட்டுதல்களையும், பரிசுகளையும் தந்து கொண்டிருந்த ஸ்ரீ ராமர், தமது வம்சாவளியினர் வழிவழியாக வழிபட்டு வந்த தமது குலதெய்வமான ஸ்ரீ ரங்கநாதர் விக்ரகத்தை விபீஷணனுக்குக் கொடுத்தார். இலங்கை செல்லும் வரை வழியில் எங்கும் கீழே வைக்கலாகாது என நிபந்தனை விதித்திருந்தார். அப்படி வைக்க நேர்ந்தால், வைத்த இடத்திலேயே பிரதிஷ்டை ஆகிவிடும் என எச்சரித்திருந்தார்.
விக்ரகத்துடன் அயோத்தியிலிருந்து புறப்பட்ட விபீஷணன், வெகு தூர பயணத்திற்குப் பின், இவ்வூருக்கு அருகில் காவிரி பிரவாகமாக ஓடுவதைக் கண்டதும், அதில் குளிக்க ஆசைப்பட்டான். அவனுக்கு அந்த ஆசையை உண்டாக்கிய விநாயகர், ஒரு பாலகன் வடிவில் எதிரில் போய்க்கொண்டிருந்தார். சிறுவனை அழைத்த விபீஷணன், தான் குளித்து விட்டு வரும் வரை விக்ரகத்தைக் கையில் வைத்திருக்குமாறும், தரையில் வைக்கக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டான்.
சம்மதித்த சிறுவன், பாரம் தாங்க முடியாத நிலை ஏற்பட்டால், மூன்று முறை கூப்பிடுவேன், நீங்கள் வந்து வாங்கிக் கொள்ளவில்லை என்றால், தரையில் வைத்து விடுவேன் என்ற நிபந்தனையுடன் விக்ரகத்தைப் பெற்றுக் கொண்டான்.
காவிரிக் குளியலின் ஆனந்தத்தில் மூழ்கியிருந்த விபீஷணனுக்கு திடீரென சிறுவனின் நிபந்தனை ஞாபகத்திற்கு வர, அவசர அவசரமாக கரைக்கு வந்தான். அங்கே விக்ரகம் தரையில் வைக்கப்பட்டு இருந்தது. "நான் மூன்று முறை அழைத்தேன், நீங்கள் வரவில்லை, பாரம் தாங்க முடியாததால், கீழே வைத்து விட்டேன்" எனக் கூறி, சிறுவனாக வந்த விநாயகர் மலையுச்சிக்கு ஓட்டம் பிடித்தான்.
தரையில் வைக்கப்பட்ட விக்ரகம் நிலை கொண்டு விட்டது. விபீஷணன் எவ்வளவோ முயன்றும், அதை அசைக்கக் கூட முடியவில்லை. எம்பெருமான் அங்கேயே சயனித்து விட்டார். விபீஷணனிடம் ஆண்டிற்கு ஒரு முறை இங்கு வந்து தன்னை சேவிக்கும்படி கூறிவிட்டார் அரங்கன். பெருமாள் தெற்கு நோக்கி திருமுக மண்டலம் கொண்டிருப்பதே, விபீஷணனுக்கு தரிசனம் தருவதற்குத்தான் என ஐதீகம். இதனாலேயே விபீஷணன் சந்நிதி ராஜ மகேந்திரன் வீதியில் உள்ளது.
முகமதிய படையெடுப்பின்போது, ஸ்ரீ ரங்கநாதருடைய உற்சவ மூர்த்தம் டில்லிக்குச் சென்று விட்டது. அந்த உற்சவ மூர்த்தியின் மீது, டில்லி பாதுஷாவின் மகள் தன் மனதைப் பறி கொடுத்திருந்தாள். பக்தர்களின் முயற்சியினால் அந்த விக்ரகத்தை மீட்டு வந்தபோது, அதைத் தேடிப் பின்தொடர்ந்து வந்து அரங்கனிடம் ஐக்கியமாகி விட்டாள் என ஸ்தல வரலாறு.
முகமதிய படையெடுப்பில் டில்லிக்கு எடுத்துச் செல்லப்பட்ட உற்சவ விக்ரகம் இல்லாத நிலையில், ஸ்ரீரங்க மாளிகையார் விக்ரகம் செய்து பூஜித்து வந்தனர். அவரே மூலவரின் திருவடிகளருகே தற்போது எழுந்தருளியுள்ளார்.
உறையூரை ஆண்ட நந்த சோழன் மகள் கமலவல்லி, ரங்கநாதரைக் காதலித்ததனால், அரசன் அவளை அரங்கனுக்கே மணம் முடித்து வைத்தான். ஸ்ரீரங்கம் சென்ற கமலவல்லி அரங்கனின் சந்நிதிக்குள் சென்று மறைந்து விட்டாள். கமலவல்லி நாச்சியாரை மணந்ததால் அரங்கனுக்கு அழகிய மணவாளன் என்ற பெயர் வந்தது என ஸ்தல வரலாறு.
வைகுண்ட ஏகாதேசி உற்சவம், மார்கழியில் (டிசம்பர் - ஜனவரி) 21 நாட்கள் சிறப்பாக நடத்துகின்றனர். ராப்பத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதேசி திருநாள் அன்று பெருமாள், துரை மண்டபத்தில் வேதங்கள் சாற்றுமுறை ஏற்று, பரமபத வாசல் வழியே வந்து, திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளுவார். வைகுண்ட ஏகாதேசியன்று காலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பரமபத வாசல் திறந்திருக்கும்.
பகல்பத்து உற்சவத்தை அத்யயன உற்சவம் என்பார்கள். முதல் நாள் இரவு திருநெடுந்தாண்டகம் பாடுவார்கள். பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி அரையர் சேவை, திருப்பாவை கோஷ்டி ஏற்று திரும்புவார். பெருமாளை ஸ்ரீ பாதம் தாங்கிகள் தூக்கி வருவார்கள். 8ஆம் நாள் ஒய்யாளி சேவை நடைபெறும். 10ஆம் நாள் தீர்த்தவாரி. ஏகாதேசி அன்றும் அதையடுத்த தினங்களிலும் முத்தங்கி சேவை கண்குளிர காணலாம்.
ஆனி மாதம் (ஜூன் - ஜூலை) நடைபெறும் ஜேஷ்டாபிஷேகம் எனும் திருமஞ்சன விழா - மூலிகைகளாலான தைலக் காப்பு - ஒரு மண்டலம் திரையிட்டிருப்பார்கள். தைலக்காப்பு உலர்ந்த பின் மீண்டும் திருமஞ்சனம் செய்து, ஆபரணங்கள் - வஸ்திரங்கள் அணிவித்து அலங்காரம் செய்வார்கள்.
திருமஞ்சனத்திற்கு அடுத்த நாள் பெரிய திருப்பாவாடை, தளிகையாக - பலாச்சுளை, வாழைப்பழம், மாங்காய், தேங்காய், நெய் ஆகியன கலந்து உப்பு சேர்த்து திருவாராதனம் செய்வார்கள்.
ஆதி பிரம்மோத்ஸவத்தின் (பங்குனி) 6ஆம் நாள் உறையூர் கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவா, 9ஆம் நாள் பிரணய கலகம் - நம்பெருமாள் - தாயார் சேர்த்தி சேவா.
கார்த்திகை மாத கைசிக ஏகாதேசியின்போது 365 போர்வைகள் போத்துவார்கள். வண்ண வாசனைப் பூக்களைக் கொண்டு வலைப்பின்னல் போல உருவாக்கப்பட்ட துப்பட்டா எனப்படும் போர்வையை கோடை திருவிழாவின்போது போத்துவார்கள்.
திருமங்கை ஆழ்வார் திருமதில் பணி புரிந்த ஸ்தலம். தொண்டரடி பொடியாழ்வார் நந்தவன கைங்கர்யம் செய்த ஸ்தலம்.
வடக்கு திரு வீதி பிள்ளை, பிள்ளை லோகாசார்யார், பெரிய நம்பி ஆகியோர் தோன்றிய ஸ்தலம்.
பெரியாழ்வார் - 35 பாசுரங்கள், குலசேகர ஆழ்வார் - 31 பாசுரங்கள், திருமழிசை ஆழ்வார் - 14 பாசுரங்கள், தொண்டரடி பொடியாழ்வார் - 55 பாசுரங்கள், திருப்பாணாழ்வார் - 10 பாசுரங்கள், திருமங்கை ஆழ்வார் - 73 பாசுரங்கள், பொய்கை ஆழ்வார் - 1 பாசுரம், பூதத்தாழ்வார் - 4 பாசுரங்கள், பேயாழ்வார் - 2 பாசுரங்கள், நம்மாழ்வார் - 12 பாசுரங்கள், ஆண்டாள் - 10 பாசுரங்கள் (மொத்தம் - 247 பாசுரங்கள்). மதுரகவி ஆழ்வார் தவிர்த்து மற்ற 11 ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்துள்ளனர்.