கருடாழ்வாரின் விண்ணப்பத்தை நிறைவேற்ற, ஸ்வாமி இத்தலத்தில் மஹாலட்சுமியுடன் திருமணக் கோலத்தில் சேவை சாதித்தார் என ஸ்தல வரலாறு. பின்நாளில் காரைவானத்து புதருக்குள் இருந்த ஸ்வாமியை, பசு ஒன்று பால் சொரிந்து அடையாளம் காண்பித்ததாகவும், இடையன் புதரைக் கிளரியதால் ஸ்வாமியின் திருமேனியில் வெட்டுண்ட தழும்பு காணப்படுவதாகவும், ஸ்வாமியை புதரிலிருந்து வெளிக் கொணர்ந்து பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பப்பட்டதாகவும் ஸ்தல வரலாறு மேலும் கூறுகிறது.
மற்றுமொரு வரலாறு பின்வருமாறு தெரிவிக்கின்றது.
ஜனகாதி மகரிஷிகளின் சாபம் கொண்டு பூலோகத்தில் இடையர் குலத்தில் பிறந்தான் இந்திரன். காரமடை பகுதியில் ஆடு மாடுகளை மேய்த்து வந்தான். அவனது காராம்பசு ஒன்று தினமும் அங்கிருந்த காரைப் புதரில் பால் சொரிவதைக் கண்டு, அந்த புதரைக் கிளரலானான். அதிலிருந்து ரத்தம் பீரிட்டு வந்தது. கிளறியவன் கண் பார்வையும் போனது. வெட்டுப்பட்ட சுவடு லிங்கத்தில் தெரிகிறது.
நடந்ததை குரு வேதவியாஸ பட்டரிடம் தெரிவித்தான் இடையன். அவர் இந்த புதருக்குள் சுயம்பு லிங்கமாக இருந்த ரங்கநாதரை வெளிக் கொணர்ந்தார். வந்திருப்பது தானே என ரங்கநாதர் அசரீரியாக தெரிவித்தார். சாப விமோசம் பெற்றான் இந்திரன். பின்னர் இக் கோவிலைக்கட்டி விட்டு வானுலகம் சென்றான் என கூறப்படுகிறது.
வைகுண்டத்தில் நாராயணனைக் காணாது தவித்த கருடன், தான் என்ற அகந்தை கொண்டு எல்லோரிடமும் சண்டை போட்டுக் கொண்டிருந்தது. அஷ்டதிக் பாலகர்கள், அஷ்ட வசுக்கள் என ஒவ்வொருவராய் சண்டை போட்டு ஜெயித்து பூலோகம் வந்து பாலகனான கிருஷ்ணனிடம் யுத்தம் புரிந்தது. யாருடன் சண்டை போடுகிறோம் எனத் தெரிந்து கொள்ளாமல் கிருஷ்ணனை தூக்கி வீச, இந்த காரமடை பகுதியில் காரைப் புதருக்குள் வந்து வீழ்கிறார் கிருஷ்ணன். நடந்த தவற்றிற்கு மன்னிப்பு வேண்டுகிறார் கருடன். தாம் இங்கே இருக்க விரும்பியே கருடன் மூலமாக இந்த நாடகத்தை நடத்தியதாக கூறுகிறார் நாராயணன். கருட தீர்த்தம் ஒன்றை உருவாக்கி, ஸ்வாமிக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டார் கருடன்.
லிங்கமாக ரங்கநாதர் குடியிருந்த இடத்தை தேடி கண்டுபிடிக்க வந்த மக்கள், தோல் பைகளில் தண்ணீரும், கையில் தீப்பந்தமும் எடுத்துக் கொண்டு காட்டிற்கு சென்ற சம்பவத்தை நினைவு கூர்ந்து தண்ணீர் சேவை மற்றும் பந்த சேவை ஆகியவற்றை ஐதீகமாக கொண்டாடுகின்றனர்.
பழம், சர்க்கரை, கடலை, நெய், திராட்சை, முந்திரி ஆகியன சேர்த்து பிசைந்து மூங்கில் கூடைகளில் தூக்கி வருவார்கள். அதற்கு கவாள சேவை என்று பெயர். இவற்றை தாசர்களுக்கு கவளம் கவளமாக கொடுப்பார்கள்.
ஏகாதேசிக்கு முன்தினம் ரங்கநாதர் மோகினி அவதாரக் காட்சி தருவதும், நாச்சியாருடன் சேஷ வாகனத்தில் வருவதும், அந்நாளில் சொர்க்கவாசல் திறக்கப்படுவதும், சிறப்பாக நடக்கும்.