புனித க்ஷேத்ரங்கள் பலவற்றிற்குமாக போய்க் கொண்டிருந்த திருமங்கை ஆழ்வார், இத்தலத்திற்கு வந்தபோது பெருமழை பெய்ததால் மலையைச் சுற்றிலும் நீர் (வெள்ளம்) சூழ்ந்தது. பெருமாளை சேவிக்காமல் திரும்பிச் செல்ல மனமில்லாமல், அருகேயுள்ள மந்திரகிரி எனும் குன்றின் மீது ஏறிச் சென்றடைந்து காத்திருந்தார். நீண்ட காலம் காத்திருந்த பிறகு நீர் வடியலாயிற்று. நீர் சூழ்ந்த மலை என்பதால் திருநீர்மலை எனப் பெயருற்றது. தோயகிரி க்ஷேத்ரம். (தோய என்றால் நீர்).
வெள்ளம் வடிந்ததும் மலை ஏறத் தொடங்கிய ஆழ்வார், இங்கு காத்திருந்த நாட்களில் - நான்கு ஊர்களுக்குப் போய் விதவிதமான கோலங்களில் பெருமாளை சேவித்திருப்பேனே என எண்ணிய வண்ணம் நடக்கலானார். ஆழ்வாரது வருத்தத்தைப் போக்கும் விதத்தில், நான்கு வித திருக்கோலங்களில் சேவை சாதித்தாராம் பெருமாள். நான்கு ஸ்தலங்களுக்குச் சென்று நான்கு வித பெருமாள்களை சேவித்த பயனை, இந்த ஒரே ஸ்தலத்தில் வழங்கினார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
'நின்றான்... இருந்தான்... கிடந்தான்... நடந்தாற்கிடம் மாமலையாவது நீர்மலையே...' எனும் ஆழ்வாரின் கூற்றுப்படி, நான்கு வகை திருக்கோலங்களில் சேவை சாதிக்கும் பெருமாளை நாம் சேவித்து மகிழ்கிறோம்.
இத்தலத்தில் வால்மீகி மகரிஷிக்கு - ஸ்ரீ ராமராக சேவை சாதித்துள்ளார் ரங்கநாதர். லட்சுமித் தாயார் இங்கு சீதா தேவியாகவும், ஆதி சேஷன் லக்ஷ்மணனாகவும், சங்கு - சக்கரம் பரத - சத்ருக்கணனாகவும், கருடன் ஹனுமனாகவும், விஸ்வ கர்மா சுக்ரிவனாகவும் காட்சி தந்துள்ளனர்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று.