சீதையை மீட்க ஸ்ரீ ராமர் நடத்திய போரில் கொல்லப்பட்ட ராவணன், புலஸ்திய முனிவரின் பேரன். சிவ பக்தன். பிராமணன். அவனைக் கொன்றதால் ராமனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. இதிலிருந்து விடுபட பிராயச்சித்தமாக லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டுமென முனிவர்கள் கூறினார்கள். இதனால் ராவண வதம் முடித்ததும் இலங்கையிலிருந்து இராமேஸ்வரம் வந்தார் ஸ்ரீ ராமர். இதன் பொருட்டு, கைலாசத்திலிருந்து ஒரு லிங்கம் கொண்டு வருமாறு அனுமனை அனுப்பினார் ராமர்.
கைலாசம் சென்ற அனுமன், தாம் நினைத்தபடி லிங்கம் கிடைக்கவில்லை என தவம் செய்யலானார். இங்கே ராமேஸ்வரத்தில் லிங்கப் பிரதிஷ்டைக்கு குறித்த முகூர்த்த வேளை நெருங்கி விட்டதால், குறித்த நேரத்தில் பூஜை நடக்க வேண்டுமே என்ற ராமரின் கவலையறிந்து, அவரது தர்ம பத்னியான சீதா தேவி தனது கரங்களால் மணலைக் கொண்டு லிங்கம் ஒன்றை உருவாக்கினாள்.
சீதை உருவாக்கிய லிங்கத்தை, சுக்கிலபட்சம் பத்தாவது நாள் புதன்கிழமை, சந்திரன் ஹஸ்தத்திலும், சூரியன் ரிஷப ராசியிலும் இருக்கும்போது, ஸ்ரீ ராமர் - சீதை இருவருமாக சேர்ந்து பிரதிஷ்டை செய்தனர்.
பூஜை தொடங்கும் முன் அனுமன் லிங்கத்தோடு வந்து சேர்ந்தார். ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த லிங்கத்தை தம் வாலினால் கட்டி இழுத்து பெயர்க்க முயன்றார். அவரால் முடியவில்லை. அனுமன் படும் பாட்டைக் கண்டு அவர் மீது பரிதாபம் கொண்ட ராமர், அனுமன் கொண்டு வந்த லிங்கத்தையும் பக்கத்திலேயே பிரதிஷ்டை செய்து விட்டார். இதற்கே முதல் பூஜை என்றும் கூறி விட்டார். அதுவே விஸ்வ லிங்கம். வால் சுற்றி இழுக்க முற்பட்டதால் ஏற்பட்ட வடு மூலவர் மீது பதிந்துள்ளது.
லிங்கத்தை இழுக்க முடியாமல் அனுமன் வீழ்ந்த இடம் அனுமந்த குண்டம் என அழைக்கப்படுகிறது. இதில் நீராடுபவர்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடிய பலனைப் பெறுவார்கள் என ராமர் ஆசிர்வதித்தார்.
மூலவரான சிவலிங்க அமைப்பு செக்கு போலத் தோன்றுவதால் செக்காட்டும் தொழில் இவ்வூரில் இல்லை. மண் கொண்டு லிங்கத்தை உருவாக்கியதால் மண் எடுத்து சூளை போடுவதுமில்லை. மண்பாண்டங்கள் செய்வதுமில்லை. இத்தலத்திற்கென ஸ்தல விருட்சமும் இல்லை. மண்ணை ஏர் கொண்டு உழுவதுமில்லை.
வடக்கே பத்ரிநாதம், கிழக்கே ஜெகந்நாதம், மேற்கே துவாரகானாதம் மற்றும் தெற்கே ராமநாதம் - ஆகிய நான்கு புண்ணிய க்ஷேத்திரங்களுக்கும் யாத்ரிகர்கள் அதிகமாக வந்து வழிபடுகின்றனர்.
இந்தக் கோவில் சேதுபதிகளின் ஜமீன் சமஸ்தானத்தைச் சேர்ந்தது. ராமபிரான் கட்டிய சேதுவை (பாலம்) காவல் புரிய ராமபிரானால் நியமிக்கப்பட்ட மறவர் தலைவன் வழியினரே சேதுபதிகள் என்பர்.
மதுரையை ஆண்ட புண்ணியநிதி எனும் அரசன் க்ஷேத்திராடனம் செய்து கொண்டே இத்தலத்திற்கு வந்து சேர்ந்தான். விஷ்ணு தரிசனம் வேண்டி பெரிய யாகம் ஒன்றை செய்தான். அவனை சோதிக்க எண்ணிய விஷ்ணுமூர்த்தி, லட்சுமியை ஒரு அநாதை சிறுமியாக அனுப்பி வைத்தார். குழந்தை பாக்கியம் இல்லாத அரசன், சிறுமியை அன்புடன் வளர்த்து வந்தான். அவள் வளர்ந்து திருமணப் பருவம் அடைந்த சமயத்தில் விஷ்ணு, ஒரு வயோதிக பிராமணனாக வந்து இளவரசியின் நந்தவனம் சென்று வம்பு செய்தார். சேடிகள் மூலமாக விஷயமறிந்த அரசன், கிழவரை சங்கிலியால் பிணைத்து இழுத்து வருமாறு கூறினான்.
அன்றிரவு அரசன் தூங்கும்போது கனவில் வந்த விஷ்ணு, தானே கிழவனாக வந்திருப்பதாகவும், தனக்கு இளவரசியை மணம் முடித்துத் தர வேண்டுமென்றும் கூறினார். மறுநாள் காலை தனது பெண்ணுடன் கோவிலுக்கு சென்று பார்த்தான் அரசன். அங்கு விஷ்ணு வடிவத்தில் சங்கிலியால் கட்டுண்ட கோலத்தில் காட்சி தந்தார். பின் அவளை மணந்து சேது மாதவர் என்ற பெயரில் இங்கேயே சேவார்த்திகளுக்கு சேவை சாதிக்கின்றார். லட்சுமிக்காக அன்பினால் கட்டுண்டதால், அதே கோலத்தில் தரிசனம் தருகிறார் என ஸ்தல வரலாறு.
ஜோதிர்லிங்கம்:
சிவலிங்கம் உருவாக்கப்படாமல் தானாகவே சுயம்புவாக தோன்றினால் அதை சுயம்பு லிங்கம் என்றும் ஜோதிர்லிங்கம் என்றும் கூறுவர்.
யார் உயர்ந்தவர் என்ற தர்க்கத்தில், பிரம்மனும் - சொற்போரில் ஆரம்பித்து விற்போராக மாறும் நிலையை வளர விடக்கூடாது என தீர்மானித்த சிவபெருமான், பல்லாயிரம் கோடி ஜ்வாலையுடன் பிரளய கால அக்னி போன்று ஜோதி ஸ்வரூபமாக அவர்களின் முன்பாக தோன்றினார். இந்த மூன்றாம் நபர் யார் எனக் கண்டுபிடிக்க, பிரம்மன் ஹம்ஸ வடிவில் மேலேயும், விஷ்ணு வராக வடிவத்தில் கீழேயும் சென்றனர்.
அடி - முடி காணாத அரியும் அயனும், விடை காண வேண்டி, முன்பிருந்த இடம் வந்து, ஜோதிப் பிழம்பைத் துதித்தனர். அப்போது ஓம் எனும் பிரணவ நாதம் எழும்பியது. அந்த ஜோதி ஸ்வரூபமே அருணாசல மலை.
அது போன்று ஜோதி ஸ்வரூபங்களாக காட்சி தந்த ஸ்வரூபங்களே ஜோதிர் லிங்கங்கள் ஆகும்.