ராவண சம்ஹாரம் முடித்து, அந்த தோஷங்கள் விலக ராமேஸ்வரம் சென்று சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டுவிட்டு, திரும்பிக் கொண்டிருந்தார் ஸ்ரீ ராமர். சீதா பிராட்டி, லட்சுமணன், ஹனுமன் மூவரும் ஸ்ரீ ராமரை பின் தொடர்ந்தனர். இத்தலமருகே வரும்போது, அவர்களை ஒரு நிழல் பின் தொடர்ந்தது. சூர்ப்பனகையின் பாதுகாவலர்களான ஹரன் - தூஷணன் எனும் இரண்டு அசுரர்களை சம்ஹாரம் செய்திருந்தார் ஸ்ரீ ராமர். இந்த நிகழ்வை நினைவுப்படுத்திக் கொண்டார் ஸ்ரீராமர். அவர்களின் ஹத்தி தோஷமே நிழல் போல் பின் தொடர்ந்தது.
இந்த ஹத்தி தோஷத்திலிருந்து விடுபட சிவலிங்க பிரதிஷ்டை செய்து பூஜிப்பதே சிறந்த வழி என முடிவு செய்து, காசிக்கு சென்று சிவலிங்கம் ஒன்றை கொண்டு வருமாறு ஹனுமனிடம் பணித்தனர். காசி சென்ற ஹனுமன் திரும்பும் வரை, சீதா பிராட்டி குடமுருட்டி ஆற்றில் மூழ்கி, மணல் கொண்டு சிவலிங்கங்களை உருவாக்கலானாள்.
ஸ்ரீ ராமர், லட்சுமணன், சீதா பிராட்டி ஆகிய மூவருமாக சேர்ந்து 106 சிவலிங்கங்களையும், ஸ்ரீ ராமலிங்கேஸ்வரரையும் மணல் கொண்டு உருவாக்கி பிரதிஷ்டை செய்து பூஜிக்கலாயினர். காசி சென்று திரும்பிய ஹனுமன் தான் கொண்டு வந்த லிங்கத்தை வெளிப் பிரகாரத்தில் வைத்து விட்டார்.
தான் கொண்டு வந்த லிங்கத்தையே மூலவராக பிரதிஷ்டை செய்ய வேண்டுமென நினைத்த ஹனுமன், ராமபிரான் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ ராமலிங்கேஸ்வரரை தனது வாலால் கட்டி இழுத்து அப்புறப்படுத்த முனைந்தார். இந்த முயற்சியில் வால் அறுபட்டு வடக்கே தூக்கி வீசப்பட்டார். (வால் அறுபட்டு விழுந்த இடம், கோவிலுக்கு 6 கி.மீ தொலைவிலுள்ளது. இவ்வூருக்கு ஹனுமன் நல்லூர் எனப் பெயர்).
ஹனுமனின் கோபத்தை தணிக்க முற்பட்ட ஸ்ரீராமர், 107 லிங்கங்களை வழிபடும் பக்தர்கள், நீ கொண்டு வந்த 108வது லிங்கத்தை வழிபட்ட பின்னரே முழுபலன் கிட்டும் என்ற ஆறுதல் கூறி ஆசி வழங்கினார்.
ஸ்ரீ ராமரின் பாவங்கள் அகல காரணமாயிருந்த இந்த ஸ்தலம் பாப விநாசம் எனப் பெயர் கொண்டது.
காசியிலிருந்து ஹனுமன் லிங்கம் எடுத்து வந்த பிறகு, அங்கு லிங்கத்தைக் காணாது தேடினார் வசிஷ்டர். இங்கிருந்த லிங்கம் எங்கே? என சூரியனிடம் வினவினார். தான் பார்க்கவில்லை என சூரியன் கூறி விட்டதால், கோபம் கொண்ட வசிஷ்டரின் சாபத்தைப் பெற்றான். சூரியன், தான் பெற்ற சாபத்தைப் போக்கிக் கொள்ள கண்டியூர் சென்று ஹரசாப விமோசனப் பெருமாளை வழிபட்டு பாதி சாபத்தைப் போக்கிக்கொண்டு, இத்தலம் வந்து இவ்விறைவனை வழிபட்டு முழு சாபமும் நீங்கப் பெற்றான் சூரியன் என ஸ்தல வரலாறு.
வசிஷ்டர் லிங்கத்தைத் தேடிக் கொண்டிருக்கும் போது, காக உருவில் அரச மரத்தின் மீது உட்கார்ந்திருந்த சனி பகவான், ஒரு குரங்கு லிங்கத்தைப் பெயர்த்து எடுத்தச் சென்றது எனக் கூறி சிரித்ததால், கோபம் கொண்ட வசிஷ்டர், தெரிந்த உண்மையை முன்பே கூறாது விட்டதனால், காகங்கள் காசியிலிருக்கலாகாது என சாபமிட்டார்.
சூரியனைப் போலவே சனி பகவானும் கண்டியூர் சென்று பாதி சாபத்தைப் போக்கிக் கொண்டு, இத்தலம் வந்து இவ்விறைவனை வேண்டி, மீதி சாபத்தைப் போக்கிக் கொண்டதாக ஸ்தல வரலாறு.
ஸ்ரீராமர், சூரியன், சனி பகவான் ஆகியோரின் சாபங்கள் நீங்கப் பெற்ற ஸ்தலம் என்பதால், இந்த ஸ்தலத்தை தோஷ நிவர்த்தி ஸ்தலமாக போற்றுகின்றனர். இங்கு 120 பிரதோஷ தரிசனங்கள் செய்தால் மறு பிறவி இல்லை என காஞ்சி மஹா பெரியவா கூறியுள்ளார்.
இத்தலத்தின் சூரிய தீர்த்தம் பிறவிப்பிணியைப் போக்க வல்லது. தைப்பொங்கலன்று பெருமாளும், திருவாதிரையில் சிவகாமி உடனாய நடராஜரும் தீர்த்தம் அருளுகின்றனர். இத்தலத்து புராதன மரமான வில்வ மரம் புயல் காற்றில் வீழ்ந்திருந்த போதிலும், அதனருகே விழுந்த விதையொன்று முளைத்து, அந்த வில்வக் கன்று தற்போது ஸ்தல விருட்சமாக உள்ளது.