இவ்வூரில் பிறந்த மாற நாயனார் சிவனடியார்களுக்கு தொண்டு செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர். அடியார்களை இறைவனாகவே பாவித்து மாகேந்திர பூஜை எனும் பூஜையை செய்பவர்.
தனது சொத்து அனைத்தையும் விற்று அடியார்களுக்கு அமுது படைத்து வந்தார். பணம் தீர்ந்து போய்விடவே, தன்னையே விற்று, ஊர் கோடியில் குடிசை அமைத்துக் கொண்டு அடிமையாக வேலை செய்து வந்தார். இவரை சோதிக்க எண்ணிய இறைவன் பஞ்சத்தை வரவழைத்தார்.
ஒரு நாள் அடியார் வேடத்தில் வந்த சிவபெருமான் தனக்கு பசிக்கிறது என்று கூறவே, செய்வதறியாது திகைத்த நாயனார், அன்று தான் விதைத்த நெல்லைக் கொண்டு வருமாறு மனைவியிடம் பணித்தார். மழை பெய்து கொண்டு இருந்ததினால் நட்ட விதைகள் மிதந்து கொண்டிருந்தன. அவற்றை சேகரித்து சோறாக்கினார். கொட்டும் மழையில் நனைந்து கொண்டே போய் கீரை பறித்து வந்தார். மழையில் விறகு நனைந்திருந்தமையால் வீட்டின் விட்டத்தை ஒடித்து அடுப்பில் போட்டு எரியூட்டி சமைத்து பரிமாறினார். வந்த அடியவர் மறைந்து அங்கு ஜோதியாக காட்சி தந்த சிவபெருமான், அவரது தூய அன்பினால் மகிழ்ந்து போய் அவருக்கு முக்தி அளித்தார் என ஸ்தல வரலாறு.
தேவார வைப்புத்தலம்.