பிரம்ம தேவர் தம்மையே பரமாக எண்ணிக் கொண்டு அகங்காரம் கொண்டதனால், படைப்புத் தொழிலை மறந்தார். இச்செயலுக்காக வருந்தி, இத்தலம் வந்து நீண்ட தவம் மேற்கொண்டார். துவாதசாட்சரத்தால் பெருமாளை பூஜித்து வழிபட்டார். பிரத்யட்சமான பரவாசுதேவர் பிரம்மாவுக்கு படைப்புத் தொழிலை புரிய அருள் புரிந்தார்.
வாசுதேவ மந்திரத்தை சித்தி செய்து அவருடைய அருளைப் பெற்ற பிரம்மா, ஒரு சுயம்பு விமானத்தை உண்டாக்கினார். அதில் தேவியர்களுடன் எழுந்தருளி சேவார்த்திகளுக்கு சேவை சாதிக்க வேண்டினார். அதன்படி பெருமாளும் இன்று வரை காட்சி தருவதாக ஐதீகம்.
கோபிலர், கோபிரளயர் எனும் இரண்டு முனிவர்கள் கண்ணபிரானை சேவிக்க துவாரகைக்கு பயணம் மேற்கொண்டனர். வழியில் ஓரிடத்தில் நிஷ்டையில் ஆழ்ந்தவர்கள், கலியுகம் துவங்கும் வரை நிஷ்டையில் இருந்தனர். துவாபர யுகத்திலேயே கண்ணன் பரமபதம் சென்று விட்டதை, பின்னர் நாரதர் மூலமாக அறிந்தனர். துவாரகை செல்லும் எண்ணத்தை கைவிட்டு, நாரதரின் யோசனையின் பேரில், இத்தலம் வந்து நீண்ட தவம் புரிந்தனர்.
பிரத்யட்சமான கண்ணனிடம் அவரது ஜலக்ரீடையைக் காண விரும்புவதாக தெரிவித்தனர். கண்ணனும் பதினாயிரம் கோபிகைகளுடன் கோபாலனாக ஹரித்ரா நதியில் ஜலக்ரீடை செய்தார். குளித்து முடித்த பின்னர் கரை மீது இருந்த வஸ்திரங்களையும் ஆபரணங்களையும் கோபிகைகள் அணிந்து கொண்டனர்.
எஞ்சியிருந்த ஓர் ஓலை, ஒரு குண்டலம் இவற்றை அணிந்து கொண்டு, ருக்மணி, சத்யபாமாவுடன் காட்சிதந்த அதே ஸ்ரீவித்யா ராஜகோபாலனாக இன்றும் காட்சி தருவதாக ஸ்தல வரலாறு.
செங்கமலத் தாயார் ப்ருகு மகரிஷியின் மகளாகப் பிறந்து பரந்தாமனையே மணந்ததாக வரலாறு.
ஒரு இரவாவது இத்தலத்தில் தங்குபவர்கள், 1000 பசுக்களை தானம் செய்த பலனைப் பெறுவர் என மஹாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பங்குனி மாதத்தில் 18 நாட்கள் பிரம்மோற்சவம் மற்றும் விடையாற்றி உற்சவமும் சிறப்பாக கொண்டாடுகின்றனர். சேவார்த்திகள் பிரார்த்தித்துக் கொண்டு பெருமாள் மற்றும் தாயார் திருவடிகளுக்கு திருமஞ்சனம் செய்கின்றனர்.
7 பிரகாரம், 16 கோபுரங்கள், 18 விமானங்கள், 24 சந்நிதிகளை உள்ளடக்கி 33 ஏக்கர் நிலப்பரப்பளவில் கட்டப்பட்டுள்ள கோவில். கோவிலுக்கருகிலுள்ள கிருஷ்ண தீர்த்தம் அழகிய நீராழி மண்டபத்தோடு விளங்குகிறது. செண்பக பிரகாரத்தில் செண்பக மரங்கள் நிறைந்துள்ளன.
கோவிலிலிருந்து 3 பர்லாங் தூரத்திலுள்ள ஹரித்ரா நதி முக்கிய தீர்த்தம். கோபியருடன் கோபாலன் ஜலக்ரீடை செய்தபோது பூசிக்கொண்ட மஞ்சள் நீரில் கரைந்ததினால் ஹரித்ரா நதி எனப் பெயர் கொண்டது. திருக்குளம் 1158 அடி நீளம், 847 அடி அகலம் கொண்டு 23 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இதை கோபால சமுத்திரம் என்றும் கூறுவர். இதில் ஸ்நானம் செய்தால் அஸ்வமேத யாகப்பலன் எனக் கூறுவர்.
இது ஒரு அபிமான ஸ்தலம்.