தால்பிய முனிவரின் சீடரான குணசீலர், சகல வேத சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்து, பின் தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். திருமலையில் திருவேங்கடவனை தரிசித்து, உள்ளத்தைப் பறிகொடுத்த குணசீலர், வேங்கடவனை தரிசிக்காது இனி இருக்க முடியாது என எண்ணம் கொண்டார்.
பின்னர் அகண்ட காவிரிக்கரையை அடைந்து தமது ஆஸ்ரமத்தில் பஞ்சாக்னி வளர்த்து கடுந்தவம் மேற்கொண்டார். புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று சிரவண நட்சத்திரம் கூடிய சுபதினத்தில், திருமால் பிரசன்ன வெங்கடாஜலபதியாகப் பிரத்யட்சமானார். திவ்ய மங்கள ஸ்வரூபனாய்க் காட்சி தந்தவரிடம், இத்தலத்திலேயே நிரந்தரமாக இருக்க வேண்டும் எனப் பிரார்த்தித்தார் குணசீல முனிவர்.
அவரது வேண்டுகோளை ஏற்று பெருமாள் இங்கு எழுந்தருளி சேவார்த்திகளுக்குச் சேவை சாதிக்கின்றார்.
குணசீலர் தவம் மேற்கொண்ட ஸ்தலம் என்பதாலும், அவருக்காகப் பெருமாள் பிரசன்னமான ஸ்தலம் என்பதாலும் இப்பகுதிக்கு குணசீலம் என்ற பெயர் வழங்கப்படுகிறது.
பெருமாளுக்குத் திருவாராதனங்கள் செய்து கொண்டிருந்த குணசீலரை, அவரது குருவான தால்பியர் தம்முடன் நைமிசாரண்யம் வரும்படி அழைக்கின்றார். பிரசன்ன வெங்கடேசரைப் பிரிய மனமில்லாமலும், குருநாதர் கட்டளையைத் தட்ட முடியாமலும் குழம்பிப் போன முனிவர் பெருமாளிடமே கேட்கிறார். உத்தரவு கிடைத்தது. சிஷ்யன் ஒருவனைத் திருவாராதனம் செய்யும்படி பணித்துவிட்டு நைமிசாரண்யம் செல்கிறார் குணசீலர்.
அடிக்கடி காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதனால், சிஷ்யன் திருவாராதனம் செய்வதை நிறுத்திவிட்டுப் போய்விடுகிறான். அர்ச்சாவதார மூர்த்தியாக இருந்த எம்பெருமான், தன்னைப் புற்றால் மறைத்துக் கொண்டார். சிறிது காலம் கழித்து, அருகேயுள்ள ஊர் ஒன்றில் பசுக்களை மேய்த்துவிட்டு, பால் கறந்து குடங்களில் நிரப்பி எடுத்து வரும் வேலைகளைச் செய்து கொண்டிருந்த இடையர்கள், பால் தானாகவே குடங்களிலிருந்து மறைவதைக் கண்ணுற்றும், அசரீரியாக வந்த அருள் வாக்கின்படியும், எம்பெருமான் புற்றில் இருப்பதை அறிந்து கொண்டும், நடந்தவைகளை அரசருக்குத் தெரியப்படுத்தினார்கள். புற்று இருக்குமிடம் வந்த அரசன், எம்பெருமான் இருப்பதைக் கண்டு மகிழ்ந்து இவ்வாலயத்தை எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
புரட்டாசியில் நடக்கும் பிரம்மோத்ஸவத்தின்போது குணசீலருக்குச் சுவாமி காட்சி தந்த வைபவம் நடக்கும். சித்ரா பௌர்ணமி தெப்போத்ஸவம் சிறப்பாக நடைபெறும். மாதாந்திர திருவோண நட்சத்திர நாளில் சுவாமி கருடசேவை சாதிக்கின்றார்.
அபிமான ஸ்தலம்.