பாதிரி வனமாக இருந்த இத்தலத்தில் பிரம்மன் ஒரு சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டு ஞான உபதேசம் பெற்றார். அந்த லிங்கமே இங்கு மூலவராக சுந்தரேஸ்வரர் எனும் திருநாமத்துடன் தரிசனம் தருகிறார். இவ்விறைவனை குபேரன் வழிபட்டு தவமிருந்து செல்வத்திற்கு அதிபதியானார் என ஸ்தல புராணம் கூறுகிறது.
பஞ்ச குரோச ஸ்தலங்களில் ஒன்று எனப் போற்றப்படுகிறது.
இந்திரன் ஐராவதத்துடன் வந்து ஸ்வாமியையும் அம்பாளையும் வழிபட்டான் என புராணக் குறிப்பொன்று கூறுகிறது. தீர்த்தக்குளப் படித்துறையில், ஐராவதத்துடன் நிற்கும் இந்திரனின் விக்ரஹம் காணலாம்.
விக்ரமாதித்தன் காலத்து காளியை உஜ்ஜயனியிலிருந்து ஒரு பெட்டியில் வைத்து மிதக்க விட்டதாகவும் அந்த பெட்டி இங்கு கரை ஒதுங்கியதாகவும் கூறப்படுகிறது. அப்பெட்டியை திறக்க அனைவரும் பயப்பட்டனர். எட்டு வயது சிறுமி ஒருவள் அதை திறந்தாள். பெட்டிக்குள் காளியின் பாதி திருவுருவம் (இடுப்புக்கு மேல்) அஷ்டபுஜங்களுடன் காணப்பட்டது. ஊர் மக்கள் அந்த திருவுருவத்தை ஒரு குடிசையில் வைத்து பூஜித்தனர். உக்ரகாளியாக இருந்ததால் குடிசை அடிக்கடி தீ பற்றி எரிய ஆரம்பித்தது.
காஞ்சி மகா பெரியவரிடம் சென்று நடந்ததைக் கூறி பரிகாரம் கேட்டார்கள். ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வைத்து பூஜிக்குமாறு யோசனை கூறினார் மகா பெரியவா. சுந்தர மகாகாளி என்ற பெயரையும் சூட்டினார்.
அன்று முதல் பெட்டிகாளியம்மன் இவ்வாலயத்தில் குடி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றாள்.
தேவார வைப்புத்தலம் - பஞ்ச குரோச ஸ்தலங்களில் ஒன்று.