பத்மகர்ணி எனும் தடாகத்தின் தாமரை மலரின் காயில் லிங்க வடிவம் கொண்டு தோன்றினார் இறைவன். நெல்லிவனமாக விளங்கும் இந்த க்ஷேத்ரத்தில் ஒரு பர்வதமாக வளர்ந்து நின்றார். இதனால் பத்மகிரீசர் எனும் பெயர் கொண்டார்.
அசுரர்களால் பீடிக்கப்பட்ட தேவர்களுக்கு, பத்மகிரியில் ஒரு பிலத்தை உண்டாக்கி அதில் புகலிடம் அளித்தார். பிலத்திலிருந்து வெளி வந்த தேவர்களை, திண்டி எனும் அசுரன் துன்புறுத்தி வந்தான். இதனால் வானவர்களைக் காக்க காலபைரவர் வடிவில் பத்மாசலேசன் என்ற பெயர் கொண்டு தோன்றிய சிவபெருமான், திண்டி எனும் அசுரனைத் தனது சூலத்தால் வதைத்தார்.
திண்டி மாசுரன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இந்த மலை உச்சியில் சூக்ஷ்ம லிங்கமாக எழுந்தருளினார். இதனால் இவ்வூருக்கு திண்டிச்சரம் என்ற பெயர் வந்தது.
பொருளாசை கொண்ட சுமேதன் எனும் அந்தணன், விஸ்வாமித்ரரின் சாபம் கொண்டு பொன்மானாக மாறி இத்தலம் வந்து, மலை மேல் சூக்ஷ்ம லிங்கமாக இருந்த சிவனார் மேற்கு முகமாகத் திரும்பி அவனை அழித்தார். வார்த்துலாசுரன் பழையபடி கந்தர்வனாகவும், பொன் மான் அந்தணனாகவும் பழைய உருவம் பெற்று சாப விமோசனமடைந்தனர் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
அனலாக்ஷன் எனும் அசுரன் அன்னை அபிராமாவுடன் போர் புரிய வந்து, அன்னையின் சூலத்தால் அழிவுற்றான். உக்ரம் தணியாதிருந்த அன்னையை அனைவரும் சாந்தப்படுத்தினர். பின்னர் பத்மகிரீசர் வந்து அபிராமாவை மணக்கின்றார்.
சந்திரன், கார்த்திகைப் பெண்கள், வருணன், பஞ்ச பாண்டவர்கள், திரௌபதி ஆகியோர் வழிபட்ட ஸ்தலம். சிவனாரின் கட்டளைப்படி கங்காதேவி தோற்றுவித்த தீர்த்தமே பஞ்ச கங்கா தீர்த்தம். பத்மகிரீசர் ஆலயத்தில் தீபங்களை ஏற்றுபவர் பெறும் பேறுகளைப் பெறுவர்.
நகரின் மையப் பகுதியிலுள்ள காளத்தீஸ்வரர் கோவிலில் மூலவராக காளத்தீஸ்வரரும், அம்பிகையாக ஞானாம்பிகையும் எழுந்தருளியுள்ளனர்.
பிள்ளையார், வள்ளி - தெய்வயானை உடனாய முருகன், நால்வர், நவகிரகங்கள் ஆகிய மூர்த்திகளைத் தரிசிக்கலாம்.
பத்மகிரீசர் மலைக்கோவிலின் பிரம்மோத்ஸவத்தின்போது உற்சவ மூர்த்திகளை நகரில் எழுந்தருளச் செய்யும் மண்டபமாக விளங்கி வந்தது. விஜயநகர மன்னன் அச்சுதராயர் இம்மண்டபத்தைக் கோவிலாக்கி காளத்தீஸ்வரரையும் ஞானாம்பிகையையும் எழுந்தருளச் செய்தார் எனக் குறிப்பொன்று கூறுகிறது.