இமயமலைச்சாரலில் பார்வதி தேவி தோழியர்களுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்தாள். பந்தைப் பிடிக்க முற்பட்டபோது, தன்னைத்தான் நிற்கச் சொல்கிறாள் அன்னை என நினைத்த சூரியன் அஸ்தமிக்காது இருந்ததால் கால நிலை மாறியது.
இதனால் கோபமுற்ற சிவபெருமான் பந்தைப் பிடுங்கி வீசி எறிந்தார். பூலோகத்தில் சரக்கொன்றை மரத்தடியில் பந்து வந்து விழுந்தது. பந்து அணைந்த தலம் என்பதால் பந்தணைநல்லூர் எனப் பெயர் கொண்டது. தற்போது பந்தநல்லூர் எனப்படுகிறது. விளையாட்டாக இருந்தாலும் இயற்கை நிலை மாறக் காரணமாயிருந்ததால் அம்பாளைப் பசுவாக மாறும்படி சபித்து விட்டார் சிவபெருமான்.
பந்து விழுந்த இடத்தில் கண்வ முனிவரின் ஆஸ்ரமம் இருந்தது. இங்கிருக்கும் கொன்றை வனத்தில் புற்றாக இருந்த லிங்க வடிவத்தை வழிபட்டு வந்தார் கண்வ முனிவர்.
பார்வதி பசுவாக மாறி பூலோகம் போவதைக் கண்ட விஷ்ணு, தன் சகோதரிக்குத் துணையாக இடையனாக வந்து பசுவுக்குப் பாதுகாப்பாக இருந்தார். பசுக்கூட்டங்களை மேய்த்துக் கொண்டு இடையனான கோபாலன் இத்தலத்திற்கு வந்தார். புற்று வடிவிலிருந்த சிவலிங்கத்திற்கு, பசுவாக இருந்த அம்பாள் பாலைப் பொழிந்து அபிஷேகம் செய்தாள்.
பசுவை விரட்டியதில், பசு நகரும்போது, அதன் காலடிக் குளம்பு லிங்கத்தின் சிரசில் பட்டது.
உடனே பசு சுயவுருவம் பெற்றது. பசுவை மேய்க்க இடையனாக வந்தவன் கோபாலனாக மாறினான். சுய உருவம் பெற்ற பசு, அம்பாளாக மாறியதும் சிவபெருமான் கல்யாணசுந்தரராகக் காட்சி தந்தார். தேவியை மன்னித்து மணந்து கொண்டார் என ஸ்தல வரலாறு. பசுவிற்குப் பதியானதால் பசுபதீஸ்வரர் என்றானார்.
தேவாரத்திருத்தலம் - பாஸ்கர க்ஷேத்ரங்களுள் ஒன்று.