பார்த்தனுக்காக ஏற்பட்ட கோவில் என்பதால் இவ்வூர் பார்த்தன்பள்ளி எனப் பெயர் கொண்டது. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாள் குருக்ஷேத்ரத்திலிருந்து வந்தவர் என்று கூறுகின்றனர்.
அகஸ்தியர், கௌதமர், பரத்வாஜர் ஆகிய ரிஷிகள் தவமியற்றிய ஸ்தலம். பிரம்மஹத்தி தோஷம் கொண்ட வருணன் இத்தலத்தில் வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றதாக ஸ்தல வரலாறு.
அர்ச்சுணனுக்கு ஏற்பட்ட தாகவிடாய் தீர்க்க, கண்ணனே தன் கையிலுள்ள கத்தியால் பூமியை துளையிட்டு தீர்த்தம் உண்டாக்கினார். தாகவிடாய் தீர்ந்ததும், அர்ச்சுணன் கண்ணனிடம் ஞானஉபதேசம் பெற்றதாக ஸ்தல வரலாறு.
இது 108 திவ்ய தேசங்களுள் ஒன்று, மேலும் திருநாங்கூர் திவ்ய தேசங்களுள் ஒன்று.
11 திவ்ய தேச ஸ்தலங்கள் தோன்றிய வரலாறு: சிவபெருமானை யாகத்திற்கு அழைக்காமலும், யாகத்தின் அவிர் பாகத்தைத் தராமலும், அவமானப்படுத்தி தட்சன் செய்யும் யாகத்திற்கு அழைப்பின்றி போனாள் பார்வதி. எவ்வளவு அறிவுரைகள் கூறியும், காதில் வாங்கிக்கொள்ளாமல் செருக்குடன் யாகத்தைத் தொடர்ந்து நடத்தினான் தட்சன்.
யாகத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்தில், யாக குண்டத்தில் குதித்து, தன் ஸ்தூல உடலை அழித்துக் கொண்டாள் பார்வதி.
நடந்தவை அனைத்தையும் அறிந்துகொண்ட சிவபெருமான் ஆவேசம்கொண்டு ருத்ர தாண்டவம் ஆடினார்.
உக்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கையில், அவரது ஜடாமுடி தரையில் பட்டு, அதிலிருந்து ஒரு சிவன் தோன்றி, ருத்ர தாண்டவம் ஆடினார். இவ்வாறாக மூலசிவனின் ஜடாமுடி தரையில் படும்போதெல்லாம் ஒரு சிவன் தோன்றி ருத்ர தாண்டவம் ஆட, முடிவில் 11 ருத்ரமூர்த்திகள் ஆடிக்கொண்டிருந்தனர்.
11 சிவ வடிவங்கள் கோபாவேசமாக ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தால் உலகிற்கு அழிவு என கலக்கமுற்றுப் பயந்த முனிவர்கள், திருமாலைச் சரணடைந்தனர். திருமாலும் 11 வித வடிவங்களில் தோன்றி, 11 சிவ தாண்டவர்கள் முன் நின்று, அவர்களை சாந்தப்படுத்தினார் என ஸ்தல வரலாறு.
சினம் தணிந்த சிவபெருமான், ஒவ்வொரு வடிவத்தையும் ஒருவருக்குள் ஒருவராகச் செலுத்தி, இறுதியில் ஒரே வடிவமாக நின்றார். தன்னைப் போலவே ஏகாதச வடிவங்கள் கொண்டு எழுந்தருள வேண்டுமென சிவன் கோரியதால், இத்தலத்தில் 11 பெருமாள்களாகத் திருமால் சேவை சாதிக்கின்றார் என ஸ்தல வரலாறு.