அகஸ்தியரின் சீடரான உரோமச முனிவர் பிறவாமை வரம் வேண்டியும், சிவதரிசனம் கண்டு முக்தி அடைய வேண்டியும் தனது குருவான அகஸ்தியரின் உதவியை கோரினார். அவரது விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில், அவருக்கு ஒன்பது மலர்களை கொடுத்தார் அகஸ்தியர். அதை தாமிரபரணி நதியில் மிதக்கவிட்டு, ஒவ்வொன்றும் எங்கு கரை ஒதுங்குகிறதோ அங்கு சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு பூஜிக்குமாறு பணித்தார்.
அந்த மலர்கள் கரை ஒதுங்கிய வெவ்வேறு இடங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபடலானார் உரோமச முனிவர். அவையே நவ கயிலாயங்கள் எனப்படுகிறது. இதில் முதல் மலர் கரை ஒதுங்கிய இடம் பாபநாசம். இந்த நவ கயிலாயங்களில், நவகோள்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஸ்தலத்தில் ஆட்சி புரிவதாக ஐதீகம். இத்தலத்தில் சூரிய பகவான் ஆட்சி புரிகிறார்.
நமச்சிவாய கவிராயரை அரசனின் தண்டனையிலிருந்து காப்பாற்ற, அம்பாள் உலகநாயகி தனது கையில் இருந்து பூச்செண்டை நமச்சிவாயர் கைக்கு மாற்றி அதிசயம் நிகழ்த்திய ஸ்தலம்.
பாவநாச தீர்த்தத்தில் நீராடுபவர்களின் பாவங்கள் நொடியில் தொலைந்து போகும். இது ஒரு ஸ்நான விசேஷ ஸ்தலம். ஆற்றோரமாக பல ஸ்நான கட்டங்கள் மண்டபங்களோடு உள்ளன. அகன்ற படிகள் கரை மேல் இருந்து நீர்மட்டம் வரை உள்ளன. 'பாவநாசத்தில் படி அழகு' என்பது ஒரு வழக்கு.
தேவார வைப்புத்தலம் - நவ கயிலாயங்களில் ஒன்று (சூரிய ஸ்தலம்) - சக்தி பீடம்