பஞ்சமுக ஆஞ்சநேயர் வரலாறு: ஸ்ரீமந் நாராயணனிடமிருந்த சுதர்ஸன சக்கரத்தை அபகரித்துச் சென்றான் மயில் ராவணன். இதனால் கோபம் கொண்ட ஆஞ்சநேயர் அவன் மீது போர் தொடுத்தார். மாயாவியான மயில் ராவணன் பல உருவங்களில் மாறி மாறி தோன்றி ஆஞ்சநேயரை களைப்படையச் செய்தான். ஸ்ரீமந் நாராயணன் தனது அவதாரங்களில் நான்கினை ஆஞ்சநேயருக்கு துணையாக நின்று போர் புரியுமாறு அனுப்பி வைத்தார். மயில் ராவணன் மிருகமாகவோ, பறவையாகவோ, பாம்பாகவோ உருவெடுத்தால் எதிர்க்க நரசிம்மனும் கருடனும், பூமி அல்லது கடலுக்கடியில் ஒளிந்தால் வெளிக் கொண்டு வர வராஹரும், மாயையை விலக்கி ஞானமளிக்க ஹயக்ரீவரும் துணையாகச் சென்றனர். பார்வதி தேவி பத்மத்தையும், ஸ்ரீ ராமர் வில்லம்பையும், கருடன் அமிர்த கலசத்தையும், இறக்கைகளையும், தர்மராஜன் பாசக்கயிற்றையும், மற்ற தெய்வங்கள் தங்களது ஆயுதங்களையும் தந்தனர். அவற்றை தனது பத்துக் கரங்களில் வைத்துக்கொண்டு பஞ்சமுக ஆஞ்சநேயர் போருக்குப் புறப்பட்டுச் சென்று மயில் ராவணனை வென்று சுதர்ஸன சக்கரத்தை மீட்டு வந்தார். இதுவே பஞ்சமுக ஆஞ்சநேயர் தோன்றிய கதை.
ஸ்தல வரலாறு: ஆஞ்சநேய சுவாமியின் பக்தர் ஒருவர், கடும் விரதமிருந்து உபாசனை செய்து தியானத்தில் மூழ்கி இருந்தபோது, பிரத்யக்ஷமாகி ஆசி வழங்கிய ஆஞ்சநேயரின் திருவுருவத்தை, அப்படியே நினைவில் வைத்து உருவாக்கப்பட்ட சிலை எனக் கூறப்படுகிறது. திருவோண நட்சத்திரத்தன்று சிலை வடிக்கும் வேலையைத் தொடங்கி, முடியும் தருவாயில் இருக்கும் வரை பிரதிஷ்டை செய்ய தகுந்த இடம் கிடைக்கவில்லை எனவும், நிலத்திற்கு சொந்தக்காரர் ஒருவர் தாமாகவே முன் வந்து மருதமலை போகும் வழியில் இடம் தருவார் என அருள்வாக்கு கேட்டதாகவும் கூறப்படுகிறது. அருள்வாக்கின்படியே அனைத்தும் நிகழ்ந்தன என சந்தோஷப்படுகின்றனர்.