பல்லவர் காலத்து குடைவரைக் கோவில். ஒரு குன்றின் மீதுள்ள பெரிய பாறையின் மேல் கட்டப்பட்டுள்ளது. இதன் மேலிருந்து பார்த்தால் திருவண்ணாமலையின் சிகரம் தெரியும்.
அறை என்றால் பாறை. பாறை மீது கட்டப்பட்ட கோவில் என்பதால் அறையணி நல்லூர் எனப் பெயர் கொண்டது. மிருகண்டு முனிவர் அரனை (சிவபெருமானை) கண்ட ஸ்தலம் என்பதால் அரகண்ட நல்லூர் எனப் பெயர் கொண்டு விளங்குவதாகவும் கூறுவர். பாறைகளில் செதுக்கி குகை போன்ற ஐந்து அறைகளை பாண்டவர்கள் செய்து கொண்டதைக் குறிப்பிடும் வகையில் அறை கண்ட நல்லூர் எனப்படுவதும் உண்டு.
மிருகண்டு முனிவர்க்கு பிரத்யட்சமான ஞான சித்தியும் அருளினார். ஓம் எனும் பிரணவ மந்திரத்தை துல்யமாக இறைவிக்கு உபதேசம் செய்தவர் என்பதால் அதுல்யநாதேஸ்வரர் என்று திருநாமம் கொண்டார்.
அர்ச்சுணன் தவம் இருந்த இடம். பஞ்ச பாண்டவர்கள் தங்களது வனவாசத்தின்போது இங்கு தங்கியுள்ளனர். அவர்கள் தங்கிய ஐந்து அறைகள் கொண்ட குகை ஒன்றும், பீமன் குளமும் காணலாம்.
மகாபலியின் ஆணவத்தை அடக்கிய மகாவிஷ்ணு, தனது தோஷம் நீங்கிட அறையணி நாதரை வழிபட்டுள்ளார்.
திருஞான சம்பந்தர் இங்கிருந்தபடியே திருவண்ணாமலையைத் தொழுதார். திருவண்ணாமலை செல்லும் முன், ரமண மகரிஷி இங்கு தங்கியுள்ளார். கபிலர் முக்தி பெற்ற கபிலக்கல் இங்கு உள்ளது.
தேவாரத்திருத்தலம்