கோச்செங்கட் சோழன் கட்டிய 78 மாடக் கோவில்களுள் ஒன்று. முசுகுந்த சக்ரவர்த்தியின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்ற ஸ்தலம்.
இத்தலத்தில் வசிஷ்டர் சிவபெருமானை பக்தியுடன் வழிபட்டு பூஜித்து வந்தார். தமக்கு பரிசாக கிடைத்த காமதேனுப் பசுவின் பாலிலிருந்து வெண்ணெய் எடுத்து, அதை லிங்கமாகப் பிடித்து வழிபட்டு வந்தார். பூஜை முடிந்ததும், லிங்கத் திருமேனியை எடுக்க முற்பட்டார். அது கையில் எடுக்க முடியாதபடி சிக்கிக்கொண்டது. இதனால் இத்தலத்திற்கு சிக்கல் எனப் பெயர் உண்டாயிற்று. லிங்கத் திருமேனி வெண்ணெய் கொண்டு செய்யப்பட்டதால் இறைவனுக்கு வெண்ணைபிரான் என்றும் நவநீதேஸ்வரர் என்றும் பெயர் பெற்றது.
வேல் நெடுங்கண்ணி அம்மன் தமது சக்தியை வேலாக சிங்காரவேலருக்கு வழங்கியதால் இத்தலத்தில் சத்ரு சம்ஹார திரிசதை அர்ச்சனை செய்தால் எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபடுவார்கள்.
சூர சம்ஹாரம் செய்ய புறப்படும் புதல்வனை அம்பிகை ஆசிர்வதித்து வேல் கொடுத்து அனுப்பிய நிகழ்வை வேல் வாங்கும் விழா என கந்த சஷ்டியின் முதல் நாளில் கொண்டாடுகின்றனர். வேகமாக சென்று வேல் வாங்குவதால் முருகப்பெருமானின் திருமுகத்தில் வியர்வை அரும்பும் காட்சி காணக் கண் கோடி வேண்டும்.
தேவாரத்திருத்தலம் - மாடக்கோவில்