மூலவர்: ஸ்ரீ நல்லிணக்கீஸ்வரர், அம்பாள்: தெய்வ நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ நல்லிணக்கீஸ்வரர். உயரமான பாணமும், பெரிய ஆவுடையாரும் கொண்டுள்ள அழகிய திருமேனி. கம்பீரமாக தரிசனம் தருகிறார். கிழக்கு பார்த்த சந்நிதி.
தெற்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தரும் அழகிய அம்பாள் தெய்வ நாயகி மிகுந்த வரப்பிரசாதி. தத்ரூபமாக காணப்படும் தெய்வீக திருவுருவம்.
ஆலய நுழைவாசலுக்கு முன்பாக, மூலவரை பார்த்தபடி இருக்கும் நந்தியம் பெருமான் வேறு எங்கும் காணக் கிடைக்காத அற்புதமான படைப்பு. படுத்திருக்கும் வடிவமைப்பிலுள்ள நந்தியின் வலப்புற முன்கால் குத்திட்டும், இடக்கால் மடிந்தும், பின்புற வலக்காலை வயிற்றுக்கடியில் நுழைத்தும் (குளம்பு தெரியும் நிலையில்) இடப்புற பின்னங்கால் மடித்தும் காணப்படுகின்றார். வாலை வயிற்றுக்கிடையில் நுழைத்து, பின்புற இடக்காலுக்கு மேல் கொண்டு வந்த அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
ருத்ராட்ச மாலை, மணிகளால் (பெல்) கோக்கப்பட்ட மாலை, இரும்பு சங்கிலி, நெத்திச்சுட்டி, ஒட்டியாணம், சலங்கை ஆகியவற்றை அணிந்தும், வஸ்திரம் தரித்தும் காணப்படுகின்றார். பற்களின் வரிசை ஒரே சீராக உள்ளன. நாசி துவாரம் வரை நாக்கு சுழன்று நீண்டுள்ளது. அதை ப்ரணாயாமக் கோலம் என்பர். காதுகள் புடைத்து விகசித்து நிற்கின்றன. காயத்ரி மந்திரத்தை கேட்டுக் கொண்டிருப்பதாக ஐதீகம்.
மஹாமண்டபத்தில் ஸ்ரீ விநாயகர், கால பைரவர், வள்ளி - தெய்வயானை உடனாய ஆறுமுகர் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். இந்த சிற்பத்தை திருவாசியுடன் சேர்த்து ஒரே கல்லிலிருந்து உருவாக்கப்பட்டதாக கூறுகின்றனர்.
நவகிரகங்கள் தத்தம் வாகனங்களுடன் தரிசனம் தருகின்றனர்.