பிஜப்பூர் சுல்தானின் சேனைத்தலைவனான முல்லா சாஹிப் என்பவரின் மகள் பேசும் சக்தியற்றவள். ஒரு நாள் தந்தையுடன் சென்றவள் இக்கோவிலருகே வரும்போது "அல்லா நயனார் ஆண்டவா" எனக் கூவினாள். இங்குள்ள லிங்கத்தைப் பார்த்ததும் தன்னுடைய ஊமைப் பெண் பேசியதில் மகிழ்ச்சியுற்ற முல்லா சாஹிப், லிங்கத்தைப் பார்த்து "நீரே அல்லா" எனக் கூறியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
வசிஷ்டரின் சாபத்தால் சண்டாளனான திரிசங்குவை வானுலகம் அனுப்ப முயற்சித்த விஸ்வாமித்ரரின் அழைப்பிற்கு இணங்காத முனிவர்களை, வேடுவர்களாக மாற சபித்து விட்டார் விஸ்வாமித்ரர். அவ்வாறு வேடர்களாக மாறிய முனிவர்கள் இவ்விறைவனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றனர்.
இவ்விறைவன் அந்தணர் வடிவம் கொண்டு, அந்த முனிவர்களுக்கு ஞான உபதேசம் செய்து வந்தார். ஆதிசேஷன் இத்தலத்தில் தவம் மேற்கொண்டு முறைப்படி பூஜித்து வந்தான். இவ்விறைவன் நல்லுபதேசம் செய்தார். இதை கண்ணுற்ற அஷ்டமா நாகங்கள் இவ்விறைவனை வழிபட்டு அவர்களும் நல்லுபதேசம் பெற்றனர்.