தட்சனிடமிருந்து பெற்ற சாபம் நீங்க, இத்தலத்து இறைவனை சந்திரன் வழிபட்ட தினம் பங்குனி மாத பௌர்ணமி. அன்றைய தினம் இறைவனது திருமேனியில் சந்திரனது கிரணங்கள் படர்கின்றன.
நிருத்துவர் என்ற முனிவரும் அவரது மனைவியான வேதிகையும் புத்திர பாக்கியம் வேண்டி, முல்லைவனநாதரை வழிபட்டனர். இறைவனருளால் வேதிகை கருவுற்றாள்.
ஒரு நாள் மனைவியை தனியே விட்டுவிட்டு நிருத்துவ முனிவருக்கு வெளியூர் செல்ல வேண்டிய கட்டாயம் நேரிட்டது. அப்போது ஊர்த்துவபாதர் எனும் முனிவர் வெயிலில் நடந்து வந்த களைப்பும், பசி - தாகமும் மேலிட, நிருத்துவ முனிவரது இல்லத்திற்கு வந்து பிட்சை கேட்டார்.
நிறைமாத கர்ப்பிணியான வேதிகை களைப்பு மிகுந்திருந்ததாலும், வெயிலின் கொடுமையாலும், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். தான் பிட்சை கேட்டும் எழுந்து வராமல் தூங்கிக் கொண்டிருக்கும் இந்த பெண் தன்னை அவமதிக்கிறாளோ என நினைத்து கோபம் கொண்ட ஊர்த்துவபாதர், "உனது கரு கலையட்டும்" என சாபம் கொடுக்கின்றார்.
குறை பிரசவமாக வெளியே வந்த கருவை ஒரு பானையில் வைத்து வாழை இலையால் மூடி எடுத்துக் கொண்டு போய் அம்பாளின் மார்பு மீது வைத்து கட்டிவிட்டு, ஸ்வாமியையும் - அம்பாளையும் வழிபட்டு மனமுருக வேண்டுகிறாள்.
குழந்தை உருவாகும் நாள் வரை கருவை காத்து, அவயங்கள் குறைவின்றி வளரச் செய்து உயிர் கொடுக்கின்றாள் அம்பாள். இதனால் கர்ப்பரட்சாம்பிகை என்ற திருநாமம் கொண்டாள். குழந்தைக்கு பால் கொடுக்க காமதேனு பாலை சுரந்து க்ஷீர புஷ்கரிணி உருவாக்கியது. குழந்தையும் நன்கு வளர்ந்தான். நைத்ருவன் என்று பெயர்.
தேவாரத் திருத்தலம் - பஞ்சாரண்ய ஸ்தலங்களுள் ஒன்று.