கௌசிக முனிவரின் புதல்வனான ம்ருகண்டு முனிவரும் அவரது மனைவி மருத்துவதியும், புத்ரபாக்யம் வேண்டி தவம் இருந்தனர். பிரம்மனின் கணக்குப்படி, 16 வயது வரை மட்டுமே வாழக்கூடிய புத்திரனைப் பெற்றனர். மார்க்கண்டேயன் எனப் பெயர் சூட்டினர். குழந்தை வளர்ந்து சிவபெருமானின் பக்தனாக இருந்தான். 16 வயது பூர்த்தியாகும் தருணத்தில் அவன் உயிரைக் கவர யமன் வந்தான்.
ஸ்ரீ சந்திரசேகராஷ்டகம் பாடிக் கொண்டே சிவபூஜையில் யமன் பாசத்தை வீசினான்.
மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை கட்டிக் கொண்டான். சிவலிங்கத்துடன் சேர்த்து மார்க்கண்டேயனை இழுத்தது யமனின் பாசக் கயிறு. லிங்கத்திலிருந்து வெளிப்பட்ட சிவபெருமான் யமனை காலால் உதைத்து தள்ளி சூலத்தால் அழுத்தி நின்றார். இவரே கால சம்ஹார மூர்த்தி. சிவபூஜையிலிருந்தவன் மீது பாசக்கயிறு வீசியது தவறு என்பதை உணர்த்தி, கடமையை செய்ய யமன் வந்ததால் அவனை மன்னித்து உயிர்பிச்சை கொடுத்தார். மார்க்கண்டேயனுக்கு சாகாவரமாக என்றும் 16 எனும் வரம் அளித்தார். பின்னர் லிங்கத்திற்குள் மறைந்தார் என ஸ்தல வரலாறு.
பங்குனி மாத அஸ்வதி நட்சத்திரத்தன்று சிவபெருமான் கங்கா தீர்த்தத்தை மார்க்கண்டேயருக்காக வரவழைத்த நாள். மார்க்கண்டேயருக்கு விதித்த அற்ப ஆயுளைப் போக்கி பூரண ஆயுஷ் தரவேண்டி பூஜை செய்த ஸ்தலமும் இதுவே.