இந்திரலோகத்தில் உல்லாசமான சூழலில் இருந்த இந்திரனின் சபைக்கு பிருகஸ்பதி வருகை தந்தார். அவர் வந்ததை கவனியாது அரம்பையரின் ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்த இந்திரனை சபித்துவிட்டுச் சென்றார் பிருகஸ்பதி. இதனால் இந்திரனின் செல்வங்கள் அவனை விட்டு அகன்றன.
பின்னர் இத்தலத்திலுள்ள கடம்பவனத்திற்கு வந்து, இங்கு சுயம்புவாக இருந்த லிங்கத்தை தரிசித்தான். வெய்யிலிலிருந்தும், மழையிலிருந்தும் லிங்கத்தை பாதுகாக்க, வானத்திலிருந்து பொன் விமானம் ஒன்றை வரவழைத்தான். தேவ தச்சன் மயன் உருவாக்கிய விமானம். பின்னர் பொற்றாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டான். பிரத்யட்சமான சிவபெருமானிடம் ஆசானை அவமதித்த ஆணவம் தொலையவும், பழி பாவம் தொலையவும் வேண்டினான். அவன் வழிபட்ட தினம் ஒரு சித்ரா பௌர்ணமி தினமாகும்.
பிறிதொரு சமயம், சிவபெருமான் சூடியிருந்த தாமரை மலர் ஒன்று கிடைக்கப் பெற்ற துர்வாச முனிவர், இந்திரனிடம் அதை பரிசாக தந்தார். அதை அலட்சியமாக வாங்கி, தனது ஐராவதத்தின் மத்தகத்தின் மீது வைத்தான் இந்திரன். மலரை துதிக்கையால் வாங்கி தனது காலில் போட்டு மிதித்தது ஐராவதம். தலைக்கனம் கொண்ட உன் தலை பாண்டியன் ஒருவன் நிலை குலையச் செய்வான் என்றும், பூவை மிதித்த உன் ஐராவதம், காட்டு யானையாக மாறி பூமியில் திரியட்டும் என்றும் சபித்துவிட்டார் துர்வாசர்.
பூலோகம் வந்து திரிந்து கொண்டிருந்த யானை, கடம்பவனம் வந்ததும் சுய நினைவு பெற்று, இந்திரன் விமானம் அமைத்து வழிபட்ட லிங்கத்தை தேடி கண்டுபிடித்து, பொற்றாமரைக்குளத்தில் மூழ்கி எழுந்து தாமரை மலர்களால் அர்ச்சித்து சிவபெருமானை வழிபட்டது. பிரத்யட்சமான இறைவன் வேண்டுவது யாது? என வினவ விமானத்தை தாங்கும் எட்டு யானைகளுள், தானும் ஒரு யானையாக இருக்க அருளுமாறு வேண்டியது.
முன்நாளில் கடம்ப வனமாக கிடந்த இவ்வூரில் தனஞ்சயன் என்ற வணிகன், தனது ஊருக்கு திரும்ப வந்து கொண்டு இருந்தபோது இருட்டி விட்டது. பயணக் களைப்பு நீங்க இங்கேயே படுத்துக் கொள்ள எண்ணினான். அப்போது, பொன் விமானம் ஒன்று ஜொலிப்பதையும் அதன் கீழ் சிவலிங்கம் ஒன்று இருப்பதையும் பார்க்கும் பாக்கியம் அவனுக்கு கிட்டியது.
பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பாக இந்திரன் நிர்மாணித்து வழிபட்ட இந்திர விமானமே, வணிகன் தனஞ்சயனின் கண்களுக்கு காட்சியாக கிடைத்தது. அஷ்ட கஜங்கள், முப்பத்தி இரண்டு சிங்கங்கள், அறுபத்திநாலு சிவகணங்கள் தாங்கி நிற்கும் பொன் வேய்ந்த விமானம்.
ஊருக்கு திரும்பியதும், தான் கண்ட காட்சிகளை மன்னர் குலசேகர பாண்டியனிடம் தெரிவித்தான் வணிகன் என ஸ்தல வரலாறு. வணிகன் தெரிவித்த விஷயங்களோடு உறங்கப்போன பாண்டியனின் கனவில், சித்தர் ஒருவர் தோன்றி அந்த இடத்தில் ஆலயம் எழுப்புமாறு பணித்தார்.
இவ்வூருக்கு நெருக்கம் ஏற்பட்டதால், விரிவுபடுத்த எண்ணி, இந்த நகரத்தின் ஆதி எல்லையை காட்டித் தருமாறு இறைவனை வேண்டினான் வம்மி சேகர பாண்டிய மன்னன். அவர் தன்னுடைய கங்கணமாகிய பாம்பை எல்லையை அளக்க அனுப்பினார். அது வாயும் - வாலும் ஒன்றுபடும்படி வட்டமாக வளைந்து எல்லையைக் குறித்தது.
பாம்பு ஒன்று வட்டமாக சுருண்டு வளைந்த தோற்றத்தில் இவ்வூரின் அமைப்பு உள்ளது. இதனால் இவ்வூருக்கு ஆலவாய் என்று பெயர். சமஸ்கிருதத்தில் ஹாலாஸ்ய என்பார்கள்.
நாகம் உமிழ்ந்த விஷத்தை நீக்க தனது சடைமுடியின் பிறையிடத்திலுள்ள அமுதத்தை (மதுவை) தெளித்து நகரத்தை மதுரமாக்கினார். இதனால் இவ்வூர் மதுரை எனப் பெயர் கொண்டது.
குலசேகர பாண்டியனின் மகனான மலையத்துவஜ பாண்டியன் - காஞ்சன மாலை தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. நீண்ட தவம் ஒன்றை மேற்கொண்டான் பாண்டியன். பராசக்தியே தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என பிரார்த்தித்தான். புத்திரகாமேஷ்டி யாகம் ஒன்றை செய்தான்.
அந்த வேள்வியில் மூன்று வயது பெண் குழந்தையாக தோன்றினாள் பராசக்தி. மூன்று தனங்களுடன் அதிசய பிறவியாக தோன்றியதால் கவலையுற்றான் மன்னன். பருவமெய்தி மணாளனைக் காணும்போது மூன்றாவது தனம் மறையும் என அசரீரி வாக்கு கேட்டது. தடாதகை எனப் பெயர் சூட்டி வளர்த்தான்.
மலையத்துவனுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்றாள் தடாதகை. பல திக்விஜயங்களை செய்து அனைவரையும் வெற்றி கொண்டாள். கயிலையை முற்றுகையிட்டு, பூத கணங்களையும் அடக்கி சிவபெருமானை நோக்கி முன்னேறினாள். சிவபெருமானை எதிர் கொண்டதும் அவளது மூன்றாவது தனம் மறைந்தது. தன்னை ஆளப் போகிறவர் இவர்தான் என உணர்ந்தாள். தடாதகை எனும் மீனாட்சியை சோமசுந்தரக் கடவுள் மணந்தார் என புராண வரலாறு.
விபூதி, ருத்ராட்சம், சடைமுடி மூன்றையும் தரித்து சோமசுந்தரர் அரசாட்சி செய்தார் எனக் கூறுவர். சிவபெருமானே சோமசுந்தரராக ஆட்சி செய்ததால் இவ்வூர் சிவராஜதானி என்ற பெயரைக் கொண்டது.
வருணன் இத்தலத்தை பேரலையால் தாக்கி அழிக்க முற்பட்டபோது, சிவபெருமான் சடையிலிருந்து விடுபட்ட நான்கு மேகங்களும் மலை போல உயர்ந்து, நான்கு மாடங்களாக கூடி நின்று மதுரையை காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் வந்தது, என ஸ்தல வரலாறு.
கடம்ப வனம், சிவ நகரம், சமஷ்டி விச்சாபுரம், ஜீவன் முக்திபுரம் என்ற பெயர்களும் உண்டு.
விக்ரம பாண்டியனின் மகன் இராசசேகர பாண்டியன், நாட்டிய பயிற்சியில் செய்ததற்கே எனக்கு கால் வலிக்கிறதே, சதா சர்வ காலமும் காலைத் தூக்கி ஆடிக் கொண்டிருக்கும் இறைவனுக்கு எவ்வளவு வலிக்கும்? என எண்ணி, வெள்ளியம்பலத்திற்கு விரைந்து சென்றான். எப்போதும் ஒற்றைக் காலில் நிற்கும் உனக்கு கால் வலிக்குமே! காலை மாற்றிக் கொள் என வேண்டினான். நீ காலை மாற்றிக் கொள்ளாவிட்டால் எனது உயிரை மாய்த்துக் கொள்வேன் எனக் கூறி அதற்கான முயற்சியில் ஈடுபட்டான்.
நடராஜப் பெருமான் காலை மாற்றி நடனம் ஆடினார் என ஸ்தல வரலாறு.
சோமசுந்தரக் கடவுள் 64 திருவிளையாடல்களை செய்து அருளிய ஸ்தலம். கபிலர், பரணர், நக்கீரர் போன்ற புலவர்களாகிய சங்கத்தார் இருந்த ஸ்தலம். மாணிக்கவாசகர் தென்னவன் பிரம்மராயன் எனும் பெயருடன் மந்திரியாக இருந்த ஸ்தலம். கூன் பாண்டியனின் சுர நோயை மந்திரமாவது நீறு எனும் பதிகம் பாடி ஞானசம்பந்தப் பெருமான் தீர்த்தருளிய ஸ்தலம். தருமி எனும் ஏழை புலவனுக்காக வந்து தமிழை ஆராய்ந்த ஸ்தலம்.
நவகிரகங்களுள் புதனுக்குரிய ஸ்தலம்.
மீனாட்சி சந்நிதி மற்றும் சுந்தரேசர் சந்நிதி தவிர மற்றவைகள் அனைத்தும், 1310ல் மாலிக்காபூர் படையெடுப்பில் அழிந்து விட்டதாக குறிப்பொன்று கூறுகிறது. தற்போதைய கோவிலை குலசேகர பாண்டியன் நிர்மாணித்தான் எனக் கூறப்படுகிறது. விஜயநகரத்து விஸ்வநாத நாயக்கின் தலைமைப் பொறியாளரான அரியநாத முதலியார் அவர்களால் ஆயிரங்கால் மண்டபமும் மற்ற மண்டபங்களும் கட்டப்பட்டனவாம். திருமலை நாயக்க மன்னன், தற்போதைய கோவில் எழும்ப, நிறைய இறை பணிகளை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.