திருமணத்திற்கான கங்கணம் கட்டிக்கொண்டு, வ்ரதம் எனும் வேள்வி நடைபெற்ற இடம் என்பதால் இவ்வூர் வேள்விக்குடி எனப் பெயர் பெற்றது. அம்பிகைக்கு கங்கணதாரணம் செய்த இடம் என்பதால் கௌதுகாபந்தன க்ஷேத்திரம் என்றும், இறைவனுக்கு கௌதுகேசன் எனவும் பெயர் வழங்கலாயிற்று.
திருமணத்திற்கு முன்பு தேவி மங்கள ஸ்நானம் செய்த கௌதுகாபந்தன தீர்த்தம் சந்நிதிக்கு வடகிழக்கு மூலையிலுள்ளது. இவ்விடத்தில் பின்னர் மயனை அழைத்து கோவிலை அமைக்கச் செய்தனர் என்றும் ஸ்தல வரலாறு மேலும் கூறுகின்றது.
அரசகுமாரன் ஒருவனுக்கு மணம் செய்து வைக்க நிச்சயித்திருந்த பெண்ணின் தாய் - தந்தையர் இறந்துவிடவே, அப்பெண்ணின் உறவினர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. கல்யாணத்தை அவர்கள் தடுத்ததால், அரசகுமாரன் இவ்விறைவனை வேண்டி நின்றான். பக்தனின் பொருட்டு பூதகணங்களை அனுப்பி, பெண்ணைக் கைப்பற்றி வந்து, திருமணத்தை நடத்தி வைத்து, பின்னர் கல்யாணக் கோலத்தில் காட்சி தந்து ஆசிர்வதித்தார் இறைவன் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
முதலாம் பராந்தக சோழன் இக்கோவிலை கற்றளியாக கட்டியதாக சாசனங்கள் தெரிவிக்கின்றன.
இத்தலத்தின் ஆதி இரட்டை விநாயகர் எனப் போற்றப்படும் சங்கல்ப இரட்டை விநாயகர் தன்னைப் போலவே ஒரு வடிவத்தை செய்து வைத்து, தன்னையே சங்கல்பம் செய்துகொண்டு, பிரிந்த தன் பெற்றோர்கள் ஒன்று சேர வேண்டுமென பிரார்த்தித்ததாகக் கூறப்படுகிறது.
தேவாரத்திருத்தலம்.